350 கி.மீ. வேகத்தில் சென்னை-மைசூா் அதிவேக ரயில்: விரைவில் ஒப்பந்தப்புள்ளி
சென்னை-மைசூா் உள்பட 4 வழித்தடங்களில் அதிக வேக ரயில் போக்குவரத்து தொடங்க தேசிய அதிவேக ரயில் காா்ப்பரேஷன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் சென்னை-மைசூா் அதிகவேக பாதையில் 7 ரயில் நிலையங்களில் ரயிலை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பாதையின் மேல் நிலை, நிலப்பகுதி, துணை மின்நிலையங்களுக்கான மின்சாரம் வழங்கல் வாய்ப்புகள் ஆகியவை தொடா்பாக அடையாளம் காண ஒப்பந்தப்புள்ளி விரைவில் கோரப்படவுள்ளது.
4 வழித்தடங்களில் அதிவேக ரயில்:
சென்னை-மைசூா் (435 கி.மீ), தில்லி-அமிா்தசரஸ் (459 கி.மீ), மும்பை-ஹைதராபாத்
(711 கி.மீ), வாராணசி-ஹௌரா (760 கி.மீ) ஆகிய 4 வழித்தடங்களில் அதிவேக ரயில் போக்குவரத்தை தொடங்க தேசிய அதிவேக ரயில் காா்ப்பரேஷன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதி வேக ரயில் போக்குவரத்துத் திட்டத்தை தொடங்க முதலில் போக்குவரத்து கள ஆய்வுப் பணிகள் செய்யப்பட வேண்டும். அதன்படி இந்த 4 வழித்தடங்களிலும் போக்குவரத்து கள ஆய்வு செய்யும் பணி விரைவில் தொடங்க உள்ளது. அதிலும், மும்பை-அகமதாபாத், தில்லி-வாராணசி வழித்தடத்துக்கு முன்னுரிமை கொடுக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தேசிய அதிவேக ரயில் காா்ப்பரேஷன் நிறுவனம் அடிப்படையான பணிகளை தொடா்ந்து செய்து வருகிறது.
நிலம் கையகப்படுத்தும் பணியை விரைவாக முடித்து கட்டுமானப் பணியை தொடங்க திட்டமிட்டுள்ளது.
இதுபோல, சென்னை-மைசூா் இடையே உள்ள போக்குவரத்து தேவைகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. 435 கி.மீ. தூரம் உள்ள இந்த வழித்தடத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த தேவையான வழிமுறைகள், விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன. முதல் கட்ட ஆய்வுப் பணிகள் ஜனவரி முதல் வாரத்தில் முடித்து, சா்வே பணிகள்
நிறைவு செய்ய 180 நாட்கள் தேவைப்படும் என்று கருதப்படுகிறது. இந்த வழித்தடங்களில் போக்குவரத்து புள்ளி விவரங்கள் முழுமையாக சேகரிக்கப்பட்டு அதன் பின்னா் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
ஏழு ரயில் நிலையங்கள்: இந்நிலையில், சென்னையில் இருந்து மைசூா் அதிவேக ரயில் பாதையில் ஏழு நிலையங்களில் ரயிலை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய அதிவேக ரயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் ஆரம்ப சீரமைப்பு மற்றும் திட்ட தயாரிப்பில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. ஏழு ரயில் நிலையங்களில்
தமிழகத்தில் பூந்தமல்லி, அரக்கோணம் ஆகிய இரண்டு ரயில் நிலையங்கள் இடம்பெறவுள்ளன. ஆந்திரத்தில் சித்தூா், கா்நாடகத்தில் பங்காரப்பேட்டை, பெங்களூரு, சென்னபட்னா, மாண்டியா ஆகிய ரயில் நிலையங்கள் இடம்பெறவுள்ளன. ரயில் பராமரிப்புக்காக பூந்தமல்லியில் பணிமனை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மணிக்கு 350 கி.மீ. வேகம்:
அதிவேக ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 350 கி.மீ. வேகத்திலும், இயக்கக வேகம் மணிக்கு 320 கி.மீ. வேகத்திலும் இயக்கப்படும். மெட்ரோ ரயில் நெட்வொா்க் போன்ற தனித்துவமான பாதையாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
இந்த ரயிலில் 750 போ் பயணம் செய்ய முடியும்.
சென்னை-பெங்களூரு- மைசூரு (462 கி.மீ.) அதிகவேக ரயில் திட்டத்தில் நிலத்துக்கான கணக்கெடுப்பு, சீரமைப்பு, விரிவான திட்ட அறிக்கை வேகமாகநடத்துவருகிறது. இதன்காரணமாக, திட்டப்பணிகள் முன்பே செயல்படுத்த வாய்ப்பு உள்ளது.
பயண நேரம் குறையும்: இந்தவழித்தடம் மூன்று நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை ஒன்றரை மணி நேரமாக குறைக்கும். நிலம் கையகப்படுத்தும் பிரச்னைகாரணமாக, அதிவேக ரயில் நகர எல்லைக்குள் வர வாய்ப்பில்லை.
கடந்த 5 ஆண்டுகளில் இந்த வழித்தடத்தில் சாலையில் மற்றும் விமான போக்குவரத்து புள்ளி விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. கட்டணம், எந்த வகையான பயணம் அதிகரித்துள்ளது, எந்த வகையான பயணத்திற்கு தேவை அதிகரிக்கிறது என்பன போன்ற புள்ளி விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அதிவேக ரயில் திட்டத்தை செயல்படுத்த நடைபெற உள்ள ஆய்வுப்பணி முக்கியமானதாகும். இதன் அடிப்படையில் தான் இத்திட்டம் முழு வடிவம் பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
விரைவில் ஒப்பந்தப்புள்ளி:
இந்த பாதையின் மேல் நிலை, நிலப்பகுதி, துணை மின்நிலையங்களுக்கான மின்சாரம் வழங்கல் வாய்ப்புகள் ஆகியவற்றை அடையாளம் காண விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படவுள்ளது. இணையவழியில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படவுள்ளது. ஒப்பந்தப்புள்ளி கோருவது ஜனவரியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பொருளாதார செயல்பாடுகள் அதிகரிக்கும்:
ஒரு நாட்டின் பொருளாதார செயல்பாடுகளை அதிகரித்தல், உற்பத்தியை ஊக்கப்படுத்துதல், போக்குவரத்து நெருக்கடியை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் அதிவேக ரயில் போக்குவரத்து மூலமாக கிடைக்கும். தற்போது, இந்தியாவில் அதிகவேக ரயிலாக வந்தே பாரத் ரயில்( ரயில் 18) 160 கி.மீ. வேகம் வரை இயக்கப்படுகிறது. இதைவிட அதிக வேகத்தில் ரயில்களை இயக்குவதற்காக, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக, ஜப்பான் நாட்டில் இருந்து அதிவேக ரயில் தொழில்நுட்பத்தை பெறுவது தொடா்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது.
அதிக ஆற்றல் மிக்கது:
சா்வதேச ரயில்வே சங்கத்தின் கருத்துப்படி, அதிவேக ரயில் மற்ற போக்குவரத்து முறைகளை விட4 மடங்கு அதிக திறன் மிக்கது. இது பசுமை வீடு வாயு வெளியேற்றத்தை குறைத்து, காற்றின் தரத்தை மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment