ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேறும் மு.க.ஸ்டாலின் பேச்சு - EDUNTZ

Latest

Search Here!

Monday, 28 December 2020

ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேறும் மு.க.ஸ்டாலின் பேச்சு

நம்பிக்கையோடு இருங்கள்: ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேறும் மு.க.ஸ்டாலின் பேச்சு 


 குடும்ப நலநிதி வழங்கும் நிகழ்ச்சி பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணியாற்றி பணிபுரியும் காலத்தில் உயிர்நீத்த தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் பொறுப்பாளர்களின் குடும்பத்தினருக்கு, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் குடும்ப நலநிதி அளிக்கும் நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

 இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கு.தியாகராஜன் முன்னிலை வகித்தார். இதில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி உள்பட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் ஏ.ரமேஷ், தலைமை நிலைய செயலாளர் தி.அருள்குமார் மற்றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். 

 நிகழ்ச்சியில் ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் பொறுப்பாளர்களான பென்ஜமின் குடும்பத்தினருக்கு ரூ.13 லட்சத்துக்கான காசோலையையும், ஆனந்தன், சுமா, சிலம்பு செல்வி குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலையையும் குடும்ப நலநிதியாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

அதையடுத்து மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசியதாவது:- தி.மு.க. ஆட்சி பேச்சை விட செயலில் தான் நம்முடைய திறமையை காட்ட வேண்டும். அதுதான் என்னுடைய கொள்கை, லட்சியம். இந்த உணர்வை என்னை உருவாக்கிய, ஆளாக்கிய தலைவர் கருணாநிதி எனக்கு கற்றுத் தந்திருக்கிறார். நிகழ்ச்சியில் சிலருக்கு குடும்பநல நிதி வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த நிதியை வழங்கிய சங்கத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை, வணக்கத்தை சொல்லிக்கொள்கிறேன். எனக்கு முன்பாக பேசிய தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தியாகராஜன் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். 

தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதும், கருணாநிதி முதல்- அமைச்சராக இருந்த போதும் நான் துணை முதல்-அமைச்சராக இருந்த போதும் கேட்டது எல்லாம் கொடுத்தோம். முன்வைத்த கோரிக்கைகள் எல்லாவற்றையும் நிறைவேற்றித் தந்தோம் என்றெல்லாம் அவர் பெருமையோடு எடுத்துச் சொன்னார். அது தான் தி.மு.க. ஆட்சி. தேர்தல் அறிக்கை சொன்னதை மட்டுமல்ல, செய்வதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்தது தி.மு.க., கருணாநிதி ஆட்சி. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்று சொன்னால், அது ஏதோ கட்சியில் இருக்கும் நிர்வாகிகளுக்கு மட்டுமல்ல, அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மட்டுமல்ல, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், பொதுமக்களும் உன்னிப்பாக, உற்றுநோக்க கூடிய, ஆவலோடு காத்து இருக்கக்கூடிய அறிக்கையாக இருக்கும். அப்படிப்பட்ட தேர்தல் அறிக்கையை இப்போது வர இருக்கக்கூடிய தேர்தலுக்காக தயாரித்து கொண்டிருக்கிறோம். டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று எல்லா தரப்பு மக்களையும் சந்தித்து மனுக்களை வாங்கி, கோரிக்கைகளை பெற்று, அறிக்கை தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக நிறைவேறும் அந்த அறிக்கை விரைவில் வரப்போகிறது. 

அந்த அறிக்கை வரக்கூடிய இந்த நேரத்தில் நீங்கள் வைத்திருக்கும் கோரிக்கைகள் தொடர்பாக நான் எதுவும் சொல்ல முடியாது. உறுதி மொழியும் தர முடியாது. அப்படி சொல்வது முறையும் அல்ல. இப்போது சொல்லி விட்டால் அந்த அறிக்கை வரும் போது அதன் தாக்கம் இல்லாமல் போய்விடும். நீங்கள் நம்பிக்கையோடு இருக்கிறீர்கள் அது எனக்கு தெரியும். நாங்களும் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். நம்பிக்கையோடு இருங்கள். நிச்சயமாக உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment