அடுத்த ஆண்டு முதல் மத்திய அரசுப் பணிகளுக்கு ஆன்லைனில் தேர்வு: ஜிதேந்திர சிங் அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 29 December 2020

அடுத்த ஆண்டு முதல் மத்திய அரசுப் பணிகளுக்கு ஆன்லைனில் தேர்வு: ஜிதேந்திர சிங் அறிவிப்பு

அடுத்த ஆண்டு முதல் மத்திய அரசுப் பணிகளுக்கு ஆன்லைனில் தேர்வு: ஜிதேந்திர சிங் அறிவிப்பு 

 அடுத்த ஆண்டு முதல், குறிப்பிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசுப் பணிகளுக்கான ஆள்தேர்வு நடைமுறைகளில் சீர்திருத்தங்களை உருவாக்கும் வகையில் தேசிய ஆள்தேர்வு முகமையை (என்ஆர்ஏ) உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முகமை பொதுத் தகுதித் தேர்வை (சிஇடி எனப்படும் செட்) நடத்தி, ஆட்களைத் தேர்வு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. 

 இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அடுத்த ஆண்டு முதல், குறிப்பிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, ''மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் தேசிய ஆள்தேர்வு முகமை உருவாக்கப்பட்டுவிட்டது. குரூப் பி மற்றும் சி பிரிவில் வரும் (தொழில்நுட்பம் சாராத) பணிகளுக்கு பொதுத் தகுதித் தேர்வை தேசிய ஆள்தேர்வு முகமை நடத்தும். இத்தேர்வின் மூலம் தேர்வர்கள் அரசுப் பணிகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்தப் புதிய முறையில் நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சமாக 1 தேர்வு மையமாவது அமைக்கப்படும். தொலைதூர கிராமங்களில் வசிக்கும் தேர்வர்களுக்கு ஆன்லைன் தேர்வு வரப்பிரசாதமாக அமையும். 

தேர்வர்களின் பின்புலம், சமூக- பொருளாதார நிலையால் சமமான வாய்ப்பை இழக்கும் நிலை தவிர்க்கப்படும். மேலும், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளித் தேர்வர்களுக்கு மிகப்பெரிய பலன் கிடைக்கும். எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி, ரயில்வே ஆள் தேர்வு வாரியங்கள் மற்றும் ஐபிபிஎஸ் சார்பில் நடத்தப்படும் தொழில்நுட்பம் அல்லாத பணிகளுக்கான பொதுத் தகுதித் தேர்வுகளையும் என்ஆர்ஏ நடத்தும். செட் மதிப்பெண் அடிப்படையில் முதல்நிலைத் தேர்வு முடிந்த பிறகு, முதன்மைத் தேர்வுகளை அந்தந்த ஆள்தேர்வு முகமைகளே நடத்தி, ஆள் சேர்க்கைப் பணிகளைத் தொடரும். முதல் பொதுத் தகுதித் தேர்வு 2021ஆம் ஆண்டு இரண்டாவது பாதியில் நடைபெறும் வகையில், தேசிய ஆள்தேர்வு முகமை திட்டமிட்டு வருகிறது'' என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

No comments:

Post a Comment