அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வழங்க ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அம்மாநில கேபினெட் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் கேபினெட் அமைச்சரவைக் கூட்டம் இணைய வழியில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகள், வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
குறிப்பாக, அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வழங்க முடிவெடுக்கப்பட்டது. அதேபோல, மக்கள் பிரதிநிதிகளும் அரசு ஊழியர்களும் ஒவ்வோர் ஆண்டும் தங்களின் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்வதைக் கட்டாயமாக்கும் முன்மொழிவுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இட ஒதுக்கீடு குறித்த விவரங்கள் பொது மக்களின் பார்வைக்காக முன்வைக்கப்படும் என்று மாநில சட்டப்பேரவை விவகாரங்கள் துறை அமைச்சர் ஏ.கே.அருகா தெரிவித்துள்ளார்.
மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எஸ்.ஆர்.தாஸ் கூறும்போது, ’’அடுத்த கல்வியாண்டு முதல் மாநில அரசு நடத்தி வரும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்படும். அவர்களின் பொருளாதாரப் பின்புலம் இட ஒதுக்கீட்டுக்கான அளவுகோலாக இருக்காது’’ என்று தெரிவித்துள்ளார்.
எனினும் எத்தனை சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
மேலும், உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான உயர் மட்டக்குழு, இடஒதுக்கீடு குறித்த முழுமையான அறிக்கையைத் தயார் செய்து அடுத்த 3 மாதத்திற்குள் மாநில அரசிடம் சமர்ப்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment