தமிழ்வழி கல்வி இடஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தல் - EDUNTZ

Latest

Search here!

Monday 7 December 2020

தமிழ்வழி கல்வி இடஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தல்

தமிழ்வழி கல்வி இடஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் 

 தமிழ்வழிக் கல்வி இடஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளனர். 

 இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கை: 

 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்:பட்டப் படிப்பு படித்தவர்கள் 10, 12-ம் வகுப்புகளிலும், 10-ம் வகுப்பு படித்தவர்கள் 6 முதல் 10-ம்வகுப்பு வரையிலும் தமிழ்வழிக் கல்வி பயின்றிருந்தால் மட்டுமே அரசுப் பணிகளில் 20 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் பயன்பெற முடியும் என்று கடந்த மார்ச் மாதம் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதற்கு கடந்த 8 மாதங்களாக ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்பு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வழக்கறிஞரே தற்போது கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு பயனளிக்கும் இந்த சட்டத் திருத்தத்துக்கு இவ்வளவு மாதங்களாக தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஏன். 

முதல்வர் நேரில் சென்று ஆளுநரை வலியுறுத்தி இந்த சட்டத் திருத்தத்துக்கான ஒப்புதலை தாமதமின்றி பெற வேண்டும். தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு வேலை கிடைக்க வகைசெய்யும் இந்த சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் பெறுவதையும் காலம் தாழ்த்தி, அதற்காக திமுக ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தும் சூழ்நிலையை உருவாக்க வேண்டாம். 

பாமக நிறுவனர் ராமதாஸ்: 

தமிழகத்தில் பள்ளிக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை தமிழில் படித்தவர்களுக்கு மட்டுமே 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஆணையிட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போதுதான் இதுதொடர்பான சட்டத்துக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்ற உண்மை தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என தமிழக அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார். 

இந்த விஷயத்தில் ஆளுநர் செய்யும் தாமதம் மிகவும் வேதனையளிக்கிறது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் தனி இடஒதுக்கீடு, மகளிருக்கு தனி இடஒதுக்கீடு, தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு போன்ற சிறப்பு ஒதுக்கீடுகளை வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்பதை பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் உறுதி செய்துள்ளன. 

 இந்நிலையில் இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் தயங்குவது ஏன் எனத் தெரியவில்லை. தமிழ்வழியில் பயில்வோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்ட நிலையில், தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிப்பதற்காக தமிழில் படிப்பவர்களுக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தினால்கூட தவறில்லை. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் எந்த சட்டத்தையும் நிராகரிக்கும் உரிமை ஆளுநருக்கு இல்லை. 

தமிழர், தமிழ் மொழி, சமூகநீதி சார்ந்த சட்டங்களை ஆளுநர் முடக்கி வைத்திருப்பது சரியல்ல. எனவே, இனியும் தாமதிக்காமல் தமிழ்வழிக் கல்வி 20 சதவீத இட ஒதுக்கீடு சட்டதிருத்தத்துக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆளுநர் அதை செய்ய மறுத்தால், தமிழக அரசே நேரடி அரசாணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment