பகலில் காவலர்.. இரவில் ஆசிரியர்...! 


 ஏழை, எளிய குழந்தைகளுக்கு கல்வி போதிக்கும் நோக்கத்துடன் பள்ளிக்கூடம் தொடங்கி பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார், ரெயில்வே காவலர் ரோகித் குமார் யாதவ். இவரது பூர்வீகம் உத்தரபிரதேச மாநிலம் எடாவாக் கிராமம். இவர் 2005-ம் ஆண்டு முதல் ரெயில்வே காவல் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை இந்திய விமானப்படையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். 

அவர் தனது சொந்த கிராமத்தை சேர்ந்த குழந்தைகளின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கூடம் ஒன்றை தொடங்கி இருக்கிறார். ஆனால் அதற்கு குடும்ப உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அந்த பள்ளிக்கூடத்தை தொடர்ந்து நடத்த முடியாமல் போனது. எப்படியாவது தந்தையின் கனவை நனவாக்க வேண்டும் என்ற எண்ணம் பணியில் சேர்ந்ததும் ரோகித் குமார் யாதவுக்குள் உண்டாகி இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பணி நிமித்தமாக உன்னாவ் பகுதியில் இருந்து ரேபரெலிக்கு ரெயிலில் சென்றிருக்கிறார். அப்போது சிறுவர்-சிறுமியர்கள் பலர் ரெயிலில் பிச்சை எடுத்துக்கொண்டிருப்பதை பார்த்து வேதனை அடைந்தவர், தந்தையின் கனவுக்கு உயிர் கொடுக்க முடிவு செய்திருக்கிறார். “பேனாவையும், வண்ண தூரிகைகளையும் வைத்திருக்க வேண்டிய குழந்தைகளின் கையில் பிச்சை பாத்திரம் இருப்பதை பார்ப்பதற்கே வேதனையாக இருந்தது. ரெயில்வே பாதை அருகே வசித்த அந்த குழந்தைகளின் வீடுகளை பார்வையிட்டேன். அவர்கள் வசிக்கும் குடிசைப் பகுதி வறுமையின் கோரத்தை படம் பிடித்து காட்டியது. குழந்தைகள் கொண்டு வரும் பணத்தை வைத்துத்தான் பெரும்பாலானவர்கள் குடும்ப செலவுகளை சமாளித்துக்கொண்டிருந்தார்கள். 

அதனால் குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்புவதற்கு தயக்கம் காட்டினார்கள். அதனால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் நானே ஆசிரியராக மாறிவிட்டேன். என் பணி முடிந்ததும் இரவு நேரங்களில் குழந்தைகளுக்கு பாடம் கற்றுக்கொடுக்க தொடங்கினேன். பின்பு ‘ஒவ்வொருவரின் கையிலும் ஒரு பேனா’ என்ற பெயரில் திறந்தவெளி பள்ளிக்கூடம் ஒன்றை தொடங்கினேன். முதலில் ஐந்து குழந்தைகள் சேர்ந்தனர். ஒரு மாதத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை பதினைந்தாக மாறியது. பிறகு ஐம்பதாக மாறியது” என்கிறார். 

 முதல் இரண்டு மாதம் ரோகித் குமார் யாதவ் மட்டுமே ஆசிரியராக பொறுப்பேற்று பாடம் நடத்தி இருக்கிறார். குழந்தைகளுக்கான பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட பிற செலவுகளை அவரே சமாளித்திருக்கிறார். அவரது சேவையை பாராட்டிய ஒரு தொண்டு நிறுவனம் வாடகை கட்டிடத்தில் பள்ளிக்கூடத்தை நடத்த ஏற்பாடு செய்திருக்கிறது. இப்போது அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பஞ்சாயத்து அலுவலகத்தில் பள்ளிக்கூடம் இயங்கிக்கொண்டிருக்கிறது. சுமார் 100 குழந்தைகள் படிக்கிறார்கள். 

இரண்டு ஆசிரியர்கள் பாடம் நடத்துகிறார்கள். “பள்ளிக்கூடம் நடத்துவதில் நான் காட்டும் ஆர்வம் எனது பணியில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கிறது. எனது தந்தையின் கனவை நனவாக்கி இருப்பதும் என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றி இருக்கிறது” என்கிறார், காவல் ஆசிரியர் ரோகித் குமார்.

Post a Comment

Previous Post Next Post

Search here!