தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் EER பதிவேட்டை எளிமையாக பராமரிப்பது எப்படி? How can elementary and middle school Head Master maintain a simple EER record? - EDUNTZ

Latest

Search here!

Thursday 10 December 2020

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் EER பதிவேட்டை எளிமையாக பராமரிப்பது எப்படி? How can elementary and middle school Head Master maintain a simple EER record?

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் EER பதிவேட்டை எளிமையாக பராமரிப்பது எப்படி?



அனைத்து ஊராட்சி ஒன்றிய மற்றும் நிதி உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளி கணக்கெடுப்புப் பகுதிகளின் எல்லைக்கு உட்பட்ட , 5 வயது முதல் 18 வயது வரையிலான பள்ளி மாணவர்கள் பற்றி, கீழ்க்கண்ட காரணங்களுக்காக கணக்கெடுப்பு நடைபெறுகிறது.


1. 5 வயது முதல் 14 வயது வரை உள்ளவர்களில் எவரேனும் இதுவரை பள்ளியில் சேராமல் இருந்தால், அவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்த்தல்.


2. 5 வயது முதல் 18 வயது உள்ளவர்கள் குடிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இடை நின்றிருந்தால் அவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்த்தல்.


 3.  5 வயது முதல் 18 வயது உடைய மாற்றுத் திறனாளிகளை கண்டறிந்து அரசு உதவிகளை பெற விண்ணப்பிக்கச் செய்தல்.


மேற்கண்ட காரணங்களுக்காக நடைபெறும் கணக்கெடுப்பிற்கு, நமது பள்ளி மக்கள் தொகைப் பதிவேடு மற்றும் EER பதிவேடு (Elementary Education Register) update செய்வது கட்டாயமாகிறது.


கோவிட் 19 புலப் பெயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், திருச்சி மாவட்டத்தில் பள்ளியில் சேராதோர் மற்றும் இடைநின்றோர் இருக்க வாய்ப்பு இருப்பதாக கருதப் படுகிறது.


இந்த கணக்கெடுப்பு மிகவும் துல்லியமாக நடைபெற மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப் பட்டுள்ளது.


ஆகவே, இந்த கணக்கெடுப்பை மிகச் சரியாக எடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.


ஏனெனில், அனைத்து மாணவர்களுக்கும் EMIS எண் உள்ளது. இந்த EMIS எண்ணும் ஆதார் எண்ணோடு இணைக்கப் பட்டுள்ளதால், இடைநின்றோர் விவரத்தை எளிதாக கல்வித் துறை அலுவலர்களால் கண்டறியவும், கண்காணிக்கவும் முடியும்.


ஏதேனும் ஒரு மாணவர் நமது குடியிருப்புப் பகுதியில் இடைநின்றிருந்து, நாம் அவரை இடை நின்றோர் கணக்கில் கொண்டு வரா விட்டால், EMIS இணைய தளத்தில், இடை நின்ற மாணவர் students common pool ல், இருப்பதாக காட்டும்.


அம்மாணவரின் EMIS எண்ணை Track செய்தால், அம்மாணவர் கடைசியாக பயின்ற பள்ளி, வகுப்பு, குடியிருப்புப் பகுதியை வட்டாரத்தில் உள்ள அலுவலர்கள் முதல் மாநிலம் வரை இருக்கும், அனைத்து ஆய்வு அலுவலர்களாலும் எளிதாக கண்டறிய முடியும்.


அந்த மாணவனை நாம் இடைநிற்றலில் காண்பிக்கா விட்டால், நாம் சரியாக கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள வில்லை எனக் கருத நேரிடும்.


மேற்கண்ட சிக்கல்களை தவிர்க்க வேண்டுமாயின், நாம் நமது EER பதிவேட்டை துல்லியமாக பராமரிப்பது அவசியமாகிறது.


தற்போது நாம் பயன்படுத்தும் EER பதிவேடு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப் பட்டது.


அதில் போதிய பக்கங்கள் இல்லாதது போன்ற சில காரணங்களால் பராமரிப்பது சற்று சிரமமாக உள்ளது.


மேலும் EER பதிவேடு வழங்கப்பட்ட ஆண்டு முதல், தற்போதைய கல்வி ஆண்டு மற்றும் இனி வரும் கல்வி ஆண்டுகள் வரை, தொடர்ச்சியாக பதிவுகளை மேற்கொள்வதிலும் சற்று சிரமம் உள்ளது.


மேலும் விரைவில் நடைமுறை படுத்தப்பட உள்ள புதிய கல்விக் கொள்கையில், 10+2 என்ற முறைக்கு பதிலாக, 


5+3+3+4 என்ற புதிய நடை முறை, அமல்  படுத்தப் பட உள்ளது.


முதல் 5 என்பது அங்கன் வாடியில் 3 வருடம் ( Pre KG, LKG, UKG) மற்றும் 1, 2 வகுப்புகளை குறிக்கும்.


அடுத்த 3 என்பது 3, 4, 5 வகுப்புகளை குறிக்கும்.


அடுத்த 3 என்பது 6, 7, 8 வகுப்புகளை குறிக்கும்.


கடைசியாக உள்ள 4 என்பது 9, 10, 11, 12 வகுப்புகளைக் குறிக்கும்.


ஆகவே தங்கள் பகுதி கணக்கெடுப்பு பகுதிக்கு உட்பட்ட 2 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள், கல்வி நிறுவனங்களில் பயில்வது என்பது கட்டாயமாக்கப் பட உள்ளது. 


இதை கண்காணித்து உறுதி செய்வது, கணக்கெடுப்பு பகுதிக்கு பொறுப்பு வகிக்கும், தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கணக்கெடுப்பு மேற் கொண்ட ஆசிரியரின் முக்கிய கடமையாகிறது.


(தற்போதைய விதிகளின் படியும் 2 வயது நிறைவு பெற்ற குழந்தை அங்கன்வாடியில் பயில்வது அவசியம் என வலியுறுத்தப் படுகிறது).


எனவே மேற்கண்ட நிலைமைகளை கருத்தில் கொண்டு, EER பதிவேடு எளிமையாக பராமரிக்கும் வகையில், ஒரு படிவம் தயாரிக்கப் பட்டுள்ளது.


இதில் ஒரு முறை மாணவரின் விவரங்களை மிகச் சரியாக சேகரித்து, பதிவுகளை  மேற்கொண்டால், ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்பது (update) செய்வது மிக எளிது.


மாணவர்களின் வயது வாரியாக பதிவுகளை மேற்கொள்ளும் வகையில், வடிவமைக்கப் பட்டுள்ளதால், மிக எளிதாக update செய்யலாம்.


முக்கியமாக நம்மிடம் பயிலும் / பயின்ற மற்றும் பயிலாத மாணவர்களின் ஆதார் எண்ணும் சேகரிக்கப் படுவதால், யாருடைய உதவியும் இன்றி EMIS இணைய தளம் மூலம், அம்மாணவர் தற்போது எந்த வகுப்பு மற்றும் பள்ளியில் பயில்கிறார் என்பதை கண்டறிய முடியும். அல்லது ஒவ்வொரு வருடமும்  கணக்கெடுக்கச் செல்லும் போது, அம் மாணவரின் பெற்றோரை சந்திக்க இயலாத நிலையில், அம் மாணவன் வீட்டின் அருகில் உள்ள பிறரிடம் சேகரித்த தகவலை EMIS இணைய தளம் மூலம் உறுதி படுத்த முடியும்.


நம் பள்ளி குடியிருப்புப் பகுதிக்கு ஏற்பவும், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்பவும், நம் பகுதியில் பிறக்கும் குழந்தைகள் விகிதத்திற்கு ஏற்பவும், ஒவ்வொரு வகுப்பிற்கும் எத்தனை தாள்கள் தேவைப்படும் எனக் கணக்கிட்டு அதற்கேற்ப நகலெடுத்து பைண்டிங் செய்து கொள்ளலாம்.


தங்கள் பள்ளிக்கு எத்தனை ஆண்டுகள் வரை இந்த பதிவேடு தேவை என்பதை தீர்மானித்து அதற்கேற்ற எண்ணிக்கையில் நகல் எடுத்து பயன் படுத்தலாம்.


உதாரணமாக 700 மக்கள் தொகை கொண்ட குக்கிராமத்தில், ஆண்டுக்கு சுமார் 10 முதல் 12 குழந்தைகள் வரை பிறக்கக் கூடும்.


எனவே இந்த பள்ளிக்கு ஆண்டுக்கு 2 படிவங்கள் போதும். (ஆண் ஒரு படிவம், பெண் ஒரு படிவம்).


சுமார் 700 மக்கள் தொகை கொண்ட குக்கிராமம் அமைந்துள்ள பள்ளியில், சுமார் 30 ஆண்டுகளுக்கான EER பதிவேடு தயாரிக்க 60 தாள்கள் போதுமானது.


இதற்கு ஆகும் செலவு 60 x 1.50 = 90  ரூபாய். கூடுதலாக பைண்டிங் கட்டணம் ரூ.50 ஆகலாம். 


30 ஆண்டுகளுக்கான EER பதிவேட்டிற்கு ஆகும் மொத்த செலவு ரூ.140 மட்டுமே.


சுமார் 700 மக்கள் தொகை கொண்ட கிராமத்தில், 5 வயது முதல் 18 வயது உடையவர்கள் எண்ணிக்கை அதிக பட்சமாக 


12 X 12 = 144 பேர் இருப்பர்.


இந்த 144 பேரில், சுமார் 100 பேர், நம் பள்ளியில் பயில்பவர் / பயின்றவராக இருப்பர். 


ஆகவே EER பதிவேட்டிற்கு இந்த 100 பேரின் தகவல்களை, நம் பள்ளிப் பதிவேடுகளின் மூலமே எடுத்து, EMIS இணைய தளம் மூலம், கல்வி கற்பதை உறுதி செய்ய முடியும்.


நம் பள்ளியில் பயிலாத, மற்ற 44 பேரின் தகவல்களை இந்த கணக்கெடுப்பின் போது, நேரில் மாணவரின் வீட்டிற்குச் சென்று சேகரித்து, EER பதிவேட்டில் பதிவு செய்யும் போது, அவர்கள் 18 வயது வரை பயில்கிறார்களா? என்பதை ஆதார் எண் கொண்டு, EMIS இணைய தளத்தின் மூலம் உறுதி செய்யலாம்.


இது போல EER பதிவேடு தயாரிக்க, தங்கள் பள்ளி குடியிருப்புப் பகுதி எண்ணிக்கைக்கு ஏற்ப, எத்தனை தாள்கள் தேவை என்பதை பள்ளி ஆசிரியர்கள் ஆலோசனை செய்து கணக்கிட்டு, அதற்கேற்ப நகல் எடுத்து பைண்டிங் செய்து பயன் படுத்துவதன் மூலம், ஆசிரியர்களின் EER update பணி துல்லியமாகவும், எளிதாகவும் இருக்கும்.


இந்தப் படிவத்தின் வலது கடைசியில் உள்ள காலி இடத்தில், மாணவரின் விவரத்திற்கு நேரே, (PH & Remarks கட்டத்திற்கு வலது புறத்தில் உள்ள காலி இடத்தில்) பெற்றோரின் கைபேசி எண்ணை பதிவு செய்து கொள்வது நல்லது.


ஏனெனில், ஏதேனும் விவரங்கள் கூடுதலாக பெற வேண்டிய நிலை ஏற்பட்டால், கைபேசி மூலம் தொடர்பு கொண்டு பெற முடியும்.


அனைத்து மாணவர்களின் விவரங்கள் EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டு, மாணவரின் EMIS எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப் பட்டு, மாணவரின் கற்றல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப் படுவதால், EER பதிவேடு, துல்லியமாக வைத்திருப்பது தலைமை ஆசிரியரின் கடமை.


EMIS இணையதளம் உருவாக்கப் பட்டதன் முக்கிய நோக்கங்களில், இதுவும் ஒன்று.


பழைய EER பதிவேட்டிலிருந்து மாணவர் பதிவுகளை மிகச் சரியாக, புதிய பதிவேட்டிற்கு  மாற்றம் செய்ய எளிய வழி:ஒவ்வொரு படிவத்திலும், பிறந்த தேதியின் அடிப்படையில், தமிழக அரசு விதியின் படி, முதல் வகுப்பு சேர தகுதி படைத்த மாணவர்களின் பெயர் பட்டியலை எழுதும் வகையில், படிவம் அமைக்கப் பட்டுள்ளது. 


(EER முகப்புப் பக்கத்திலேயே,


முதல் வகுப்பு சேர தகுதி பெற வேண்டிய மாணவர்கள் பிறந்திருக்க வேண்டிய தேதி, கல்வி ஆண்டு வாரியாக தரப் பட்டுள்ளது ).


பழைய EER பதிவேட்டில், மாணவர் பிறந்த தேதியின் அடிப்படையில், அதற்கு பொருத்தமான புதிய படிவத்தில் பெயர் மற்றும் பிற விவரங்களை சரியாக எழுத வேண்டும். 


பிறகு நடப்பு கல்வி ஆண்டான, 2020-21 ஆம் கல்வி ஆண்டில், மாணவன் எந்த வகுப்பில் பயில்கிறான் என்பதை மாணவரின் வீட்டிற்குச் சென்று, நேரில் பெற்றோரிடம் கேட்டறிந்து, EER படிவத்தில் மிகச்சரியாக குறிக்க வேண்டும்.

இதன் பின், கடந்த கல்வி ஆண்டுகளில் பயின்ற வகுப்புகளை பதிவு செய்யலாம்.

உதாரணமாக 19.05.2005 ல் பிறந்த மாணவர்,(2020-21 ஆம் கல்வி ஆண்டில்) நடப்புக் கல்வி ஆண்டில் 11 ஆம் வகுப்பு பயில்கிறார் என்றால், 2020-21 ல், 11 என குறிக்க வேண்டும். 

( இந்த மாணவருக்கு 01.08.2004 முதல் 31.07.2005 வரை உள்ள DOB படிவத்தை பயன் படுத்த வேண்டும்).

கடந்த கல்வி ஆண்டுகளில் 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, அங்கன் வாடியில் 3 வருடம் (அல்லது UKG, LKG, Pre KG) என்ற வரிசையில் குறிக்கலாம். 

அதாவது அம்மாணவர் 2010-11 ஆம் கல்வி ஆண்டில் முதல் வகுப்பு பயின்றிருக்க வேண்டும்.

இனி வரும் கல்வி ஆண்டுகளில், பயிலும் வகுப்பை EMIS இணையத்தில் உறுதி செய்த பின், அந்தந்த ஆண்டில் EER ல் பதிவு செய்யலாம்.

பல தலைமை ஆசிரியர்கள், புதிய படிவத்தில் பதிவுகள் மேற்கொள்ளும் விதம் மற்றும் பராமரிக்கும் விதம் பற்றி, கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இந்த தகவல் பதிவிடப்படுகிறது.


Click here to download pdf



1 comment: