மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு தடை இல்லை HC 


மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்து உத்தரவிட்டுள்ளது. மாணவி வழக்கு மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி, தமிழக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் 405 அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த நிலையில் இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பூஜா என்ற மாணவி வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- 

 நியாயமற்றது 

 2018-ம் ஆண்டு 12-ம் வகுப்பு முடித்தேன். நீட் தேர்வை நடப்பாண்டில் 3-வது முறையாக எழுதி 565 மதிப்பெண்கள் பெற்றேன். ஆனாலும், மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கவில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதால், அதிக மதிப்பெண் எடுத்தும் எனக்கு இடம் கிடைக்கவில்லை. ஆனால் நீட்தேர்வில் 200 மதிப்பெண் கூட எடுக்காத அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் இடம் கிடைத்துள்ளது. இது நியாயமற்றது. 

 தடை வேண்டும் 

 எனவே, தமிழக அரசு கொண்டு வந்த 7.5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். இந்த 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களை மருத்துவ படிப்பில் சேர்த்ததை இறுதி செய்யக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். இந்த இடஒதுக்கீட்டு சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. 

 மேம்படுத்த வேண்டும் 

 அப்போது நீதிபதிகள், “தற்போது அனைத்து மருத்துவ இடங்களும் நிரப்பப்பட்டு விட்டதால், தமிழக அரசு கொண்டு வந்துள்ள 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது. அரசு பள்ளிகளின் தரம் குறைவாக இருப்பதால் தான் மாணவர்களுக்கு இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. அதனால், அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அரசு பள்ளி மாணவர்களை தங்கள் வீட்டு பிள்ளைகளாக பார்க்க வேண்டுமே தவிர, எதிரியாக பார்க்க கூடாது. ஏழை மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைப்பதை உறுதி செய்யவே இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது” என்று கருத்து கூறினர். 

 விசாரணை தள்ளிவைப்பு 

 பின்னர் மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளோடு சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என்று கூறி விசாரணையை ஜனவரி 5-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Post a Comment

Previous Post Next Post

Search here!