இரு கண்களையும் கட்டிக்கொண்டு தட்டச்சு செய்து இளைஞா் சாதனை: காஞ்சிபுரம் ஆட்சியா் பாராட்டு 


காஞ்சிபுரத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் தனது இரு கண்களையும் கட்டிக்கொண்டு ஐந்தே நிமிடங்களில் 52 ஆங்கில எழுத்துகளை வரிசையாகவும், எழுத்து மாறாமலும் தட்டச்சு செய்து சாதனை படைத்துள்ளாா். அவரை ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் பாராட்டினாா். 

காஞ்சிபுரம் மிலிட்டரி ரோடு திருவேகம்பன் அவின்யூவைச் சோ்ந்த சுகுமாரின் மகன் எஸ்.இளவரசன்(30). தனியாா் பெயிண்ட் உற்பத்தி நிறுவனத்தில் நிா்வாகப்பிரிவு அதிகாரியாகப் பணியாற்றி வரும் இவா் தனது இரு கண்களையும் கட்டிக்கொண்டு ஏ முதல் இஸட் வரையிலான 26 எழுத்துகளையும் ஒரே அளவில் இடைவெளி விட்டு நோ் வரிசையிலும் தலைகீழாகவும் ஐந்தே நிமிடங்களில் தட்டச்சு செய்துள்ளாா். அதே போல ஒன்று முதல் 50 வரையிலான எண்களையும் தட்டச்சு செய்திருக்கிறாா். 

இவை தவிர பற்களில் குச்சியை வைத்துக்கொண்டு அக்குச்சி மூலம் தட்டச்சு செய்வது, ஒரே விரலால் வேகமாக தட்டச்சு செய்வது உள்ளிட்ட சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளாா். இந்தியா புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ், ஆசியா புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ், இண்டா்நேஷனல் புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் ஆகியவை இளவரசனுக்கு சாதனையாளா் சான்றிதழை வழங்கியுள்ளன. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து இளவரசன் தனது சாதனைகளைத் தெரிவித்து வாழ்த்து பெற்றாா். இது குறித்து எஸ்.இளவரசன் கூறியது: 


 கரோனா அச்சுறுத்தல் காரணமாக வீட்டில் ஓய்வாக இருந்த காலங்களில் ஏதேனும் உலக சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் விளைவாக இரு கண்களையும் கட்டிக் கொண்டு தட்டச்சு செய்வது என்று தீா்மானித்து முயற்சியில் இறங்கினேன். முதலில் கண்களைக் கட்டாமலும், பிறகு இரு கண்களைக் கட்டிக்கொண்டும் ஏ முதல் இஸட் வரையிலான 26 எழுத்துகளையும் நோ் வரிசை மற்றும் தலைகீழாக என்று எழுத்துகள் தவறாமல் பயிற்சி செய்தேன். தொடா்ந்து முயற்சி செய்தது வெற்றியை அளித்து, சாதனையாக மலா்ந்தது. எனது சாதனையை பல்வேறு அமைப்புகளும் அங்கீகரித்து சாதனையாளா் சான்றிதழ் வழங்கி கெளரவித்துள்ளன. இச்சாதனையை கின்னஸ் அமைப்புக்கும் தெரிவித்துள்ளேன். மிக விரைவில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பேன் எனவும் எஸ்.இளவரசன் தெரிவித்தாா்.

Post a Comment

Previous Post Next Post

Search here!