புதுக்கோட்டை: தனக்கு உதவ வந்த தொண்டு நிறுவனம் மூலம், தன் கிராமத்தில், 126 வீடுகளுக்கு கழிவறை கட்ட காரணமாக இருந்த மாணவியை, கிராமமே கொண்டாடி வருகிறது.
புதுக்கோட்டை, ஆதனக்கோட்டையைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி, 17; ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படிக்கிறார்.கடந்த ஆண்டு, தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய, விண் அறிவியல் போட்டியில் வெற்றி பெற்று, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான, நாசாவிற்கு செல்ல, ஜெயலட்சுமி தேர்வானார்.கஜா புயலில் சிதைந்த ஓட்டு வீடு, சிறுவயதிலே கைவிட்டுச் சென்ற தந்தை, மனநலம் பாதிக்கப்பட்ட தாய் என, வறுமையில் வாடிய ஜெயலட்சுமியால், நாசா செல்வதற்கான கட்டணத்தை செலுத்த முடியவில்லை.
அப்போது, மாவட்ட நிர்வாகமும், பல தனியார் நிறுவனங்களும் நிதியுதவி அளித்தன.
இந்நிலையில், கிராமாலயா என்ற தொண்டு நிறுவனம், ஜெயலட்சுமி நாசாவுக்கு செல்ல உதவுவதாக கூறியுள்ளது. ஆனால், போதிய நிதி சேர்ந்து விட்டதால், எனக்கு எந்த உதவியும் வேண்டாம். என் கிராமத்தில் கழிப்பறை இல்லாமல், பெண்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.
முடிந்தால், கழிப்பறை கட்டித் தாருங்கள் என, கோரிக்கை விடுத்துள்ளார்.மாணவியின் தொண்டுள்ளத்தை பார்த்து வியந்த தொண்டு நிறுவன நிர்வாகிகள், கிராமத்தில் கழிப்பறை இல்லாத வீடுகளை கணக்கெடுத்து, 126 வீடுகளுக்கு கழிப்பறை கட்டிக் கொடுத்துள்ளனர். இதுவரை இயற்கை உபாதைக்காக, 2 கி.மீ., காட்டு பகுதியை கடந்து சென்று வந்த பெண்கள், தற்போது, ஜெயலட்சுமி முயற்சியால், தங்கள் வீட்டருகில் கட்டிய கழிப்பறைகளை பயன்படுத்தி வருகின்றனர். 126 கழிப்பறைகள் கட்ட வழிகாட்டிய ஜெயலட்சுமியை, மக்கள், சொந்த பிள்ளை போல் கொண்டாடி வருகின்றனர்.
ஜெயலட்சுமி கூறியதாவது:
கிராமாலயா தொண்டு நிறுவன நிறுவனர் தாமோதரன், என் வேண்டுகோளை ஏற்று, எங்கள் கிராமத்தில், 126 வீடுகளில், தலா, 20 ஆயிரம் ரூபாய் செலவில், கழிப்பறைகள் கட்டிக் கொடுத்துள்ளார். கிராமாலயாவுக்கும், அதன் நிர்வாகிகளுக்கும் நன்றி. இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment