ஆன்லைன் வகுப்பு எதிரொலி கல்லூரி மாணவர்களுக்கு தினமும் ‘2 ஜி.பி. டேட்டா’ இலவசம் - EDUNTZ

Latest

Search Here!

Monday, 11 January 2021

ஆன்லைன் வகுப்பு எதிரொலி கல்லூரி மாணவர்களுக்கு தினமும் ‘2 ஜி.பி. டேட்டா’ இலவசம்

ஆன்லைன் வகுப்பு எதிரொலி கல்லூரி மாணவர்களுக்கு தினமும் ‘2 ஜி.பி. டேட்டா’ இலவசம் 


 கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா இலவசமாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  

 ஆன்லைன் வகுப்புகள்
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் கொரோனா பரவல் தொடங்கிய நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் ஆகியவை மூடப்பட்டன. இடையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது, அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் எல்லாம் திறக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் மட்டும் திறக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் கல்லூரிகள் திறக்கப்பட்டு, முதல் ஆண்டு மாணவர்களை தவிர, மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெற்றன. கடந்த மாதம் செமஸ்டர் தேர்வும் நடந்து முடிந்தது.  

 2 ஜி.பி. டேட்டா இலவசம்
இதற்கிடையே கடந்த அக்டோபர் மாதம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. தற்போது அந்த மாணவர்களுக்கும் ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரி மாணவர்களுக்கும் இம்மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை தினமும் 2 ஜி.பி. டேட்டா (தரவு) விலையில்லாமல் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-  

 மாணவர் சேர்க்கை 49 சதவீதமாக உயர்வு
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அ.தி.மு.க. அரசு எடுத்த பல்வேறு சீரிய நடவடிக்கைகளின் காரணமாக உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களின் சேர்க்கை விகிதம் தமிழ்நாட்டில் 32 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், கல்லூரி மாணாக்கர்கள் சிறந்த கணினி திறன்களை பெற்றிட அ.தி.மு.க. அரசு, அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.  

 இணைய வழி வகுப்புகள்
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் இணைய வழி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்த இணைய வழி வகுப்பு களில் மாணாக்கர்கள் கலந்துகொள்ள ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணாக்கர்களுக்கு ஜனவரி (இம்மாதம்) முதல் ஏப்ரல் மாதம் வரை 4 மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜி.பி. தரவு (டேட்டா) பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா தரவு அட்டைகள் (டேட்டா கார்டுகள்) வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன். இக்கொரோனா பெருந்தொற்று காலத்திலும் இணைய வழி வகுப்புகள் மூலமாக சிறந்த முறையில் கல்வி கற்றிட அ.தி.மு.க. அரசால் வழங்கப்படும் விலையில்லா தரவு அட்டைகளை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியில் மேன்மேலும் சிறக்க வேண்டுமென்று மாணாக்கர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment