2020-21-ம் கல்வியாண்டுக்கான
2 எம்.டெக். பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்
அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பால் மாணவ-மாணவிகள் அதிர்ச்சி
அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 எம்.டெக். பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதால் மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எம்.டெக். பாடப்பிரிவுகள்
அண்ணா பல்கலைக்கழகத்தில் 2020-21-ம் கல்வியாண்டுக்கான எம்.டெக். உயிர் தொழில்நுட்பவியல் மற்றும் எம்.டெக். கணக்கீட்டு உயிரியல் திட்டங்கள் பாடப்பிரிவுகளில் சேருவதற்கு, கடந்த ஆண்டு (2020) ஜூலை மாதம் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் பட்டதாரி திறன் தேர்வு (கேட்) எழுதி தேர்ச்சி பெறும் சிறந்த மாணவர்களுக்கு இடங்கள் வழங்கப்படும் என கூறப்பட்டது. இந்த 2 பாடப்பிரிவுகளிலும் உள்ள 45 இடங்களுக்கு கிட்டதட்ட 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது.
கொரோனா காரணமாக 3 முறை ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடந்து முடிந்தது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இடங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் தற்போது பேரதிர்ச்சியை தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு கொடுத்து இருக்கிறது.
மாணவர் சேர்க்கை நிறுத்தம்
அதாவது, 2020-21-ம் கல்வியாண்டுக்கான எம்.டெக். உயிர் தொழில்நுட்பவியல் மற்றும் எம்.டெக். கணக்கீட்டு உயிரியல் திட்டங்கள் பாடப்பிரிவுகளில் மத்திய அரசு இடஒதுக்கீட்டு முறையை மாநில அரசால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதன் காரணங்களால் மேற்சொன்ன பாடப்பிரிவுகளில் 2020-21-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடர முடியவில்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின.
இதற்கு மாணவ-மாணவிகளின் பெற்றோர் கடும் எதிர்ப்பை பதிவு செய்து இருக்கின்றனர். இடஒதுக்கீட்டு முறையை காரணம் காட்டி மாணவ-மாணவிகளின் ஓராண்டு படிப்பை நாசம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த முயற்சியும் செய்ய முன்வராமல் இப்படி முடிவு எடுத்திருப்பது வேதனையை அளிக்கிறது என்றும் மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment