தனது உயிரைத் துச்சமென நினைத்து 26 குழந்தைகளைக் காப்பாற்றி, படுகாயம் அடைந்த ராணிப்பேட்டை புலிவலம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை முல்லைக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா விருதை முதல்வர் பழனிசாமி வழங்கி கவுரவித்தார்.
ஓவ்வொரு ஆண்டும் தமிழக அரசு, வீர தீரச் செயல்கள் புரிந்த அரசு ஊழியர்கள் / பொது மக்களுக்கு வீர தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கங்களை வழங்கி வருகின்றது. இப்பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.1,00,000/-க்கான (ரூபாய் ஒரு லட்சம்) காசோலையும், ரூ.9,000/ மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும்.
இவ்வாண்டுக்கான வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்களை நான்கு நபர்களுக்கு முதல்வர் பழனிசாமி வழங்கினார். அதில் ஒருவர் ஆசிரியை முல்லை ஆவார்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், புலிவலம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 29-01-2020 பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் இப்பள்ளியின் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியையான பா.முல்லை ஒரு பள்ளி நிகழ்ச்சிக்காக நாடக ஒத்திகைகளை 26 மாணவ, மாணவிகளுடன் பள்ளி வளாகத்தில் செய்து கொண்டிருந்தார். அப்போது பள்ளியை ஒட்டி இருந்த வீட்டிலிருந்து எரிவாயு கசிந்து வாசனை வந்தது.
சமயோசிதமாக யோசித்து, ஏதோ விபரீதம் நடக்க உள்ளதை உணர்ந்த ஆசிரியை முல்லை, அருகில் இருந்த 26 மாணவர்களை அங்கிருந்து விலகி தூரமாகச் செல்ல வைத்தார். தானும் அங்கிருந்து செல்ல முற்பட்ட நேரத்தில் எரிவாயு கசிவால் பெரும் விபத்து ஏற்பட்டு பள்ளியை ஒட்டி இருந்த வீட்டின் சுவர் இடிந்து பள்ளியின் வளாகத்தில் விழுந்தது. இதனால் அவர் படுகாயம் அடைந்தார்.
தன்னலம் கருதாமல் மாணவர்களின் நலம் பெரிதென நினைத்து 26 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய உயர்நிலைப் பள்ளி ஆசிரியை பா.முல்லைக்கு 2021-ம் ஆண்டின் வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கத்தை இன்று முதல்வர் பழனிசாமி வழங்கிச் சிறப்பித்தார்.
No comments:
Post a Comment