பிளஸ் 2 தேர்வு மாணவர் பட்டியல்; இன்று முதல் பதிவு செய்ய உத்தரவு 




 பிளஸ் 2 பொது தேர்வுக்கான மாணவர் பட்டியலை, பள்ளிகள் இன்று முதல் தயாரிக்க வேண்டும்' என, அரசு தேர்வு துறை உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே, தலைமை ஆசிரியர்களுக்கு, அரசு தேர்வு துறை இயக்குனர் உஷாராணி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

கடந்த, 2020ம் ஆண்டில் நடந்த பிளஸ் 1 பொது தேர்வுக்கு தயாரிக்கப்பட்ட மாணவர் பட்டியலை அடிப்படையாக வைத்து, 2020 - 21ம் கல்வி ஆண்டில், பிளஸ் 2 பொது தேர்வுக்கான மாணவர் பட்டியலை, தலைமை ஆசிரியர்கள் தயாரிக்க வேண்டும். இன்று பிற்பகல் முதல், பிப்., 1ம் தேதி வரை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், அரசு தேர்வு துறை வழங்கியுள்ள பயனர் அடையாள குறியீட்டை பயன்படுத்தி, மாணவர் விபரங்கள் அடங்கிய பட்டியலை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.இந்த பட்டியலில் உள்ள விபரத்துடன், தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் விபரங்களை சரிபார்க்க வேண்டும். 

தமிழ் மற்றும் ஆங்கில மொழியில், மாணவர் விபரங்களில் பிழைகள் இருந்தால், அதை திருத்தி கொள்ளலாம். பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் விபரம் அடிப்படையில், திருத்தம் செய்ய வேண்டும். திருத்தத்துடன், 10ம் வகுப்பு சான்றிதழின் நகலையும் இணைத்து, வரும், 2ம் தேதிக்குள், முதன்மை கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.மாணவர்கள், பிளஸ் 1க்கு பின், வேறு பள்ளிக்கு மாறியிருந்தால், புதிய பள்ளியில் மாணவர்களின் விபரங்களை சேர்க்க வேண்டும். 

 ஆனால், பாடப்பிரிவு, பாடம் போன்ற விபரங்கள் மாறக்கூடாது. பிளஸ் 1 தேர்வு எழுதி, அந்த மாணவருக்கு மாற்று சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தால் மட்டும், அந்த மாணவரை பெயரை பட்டியலில் இருந்து நீக்கம் செய்யலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!