தமிழகத்தில் 6 லட்சம் பேருக்கு முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை, ஜன.11-
ஒட்டுமொத்த உலகையும் ஓராண்டுக்கு மேலாக கட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா அரக்கனின் கொடூரத்தை அழிக்க இந்தியா தீவிரமாக தயாராகி வருகிறது.
நாடு முழுவதும் ஒரு கோடிக்கு அதிகமான பாதிப்புகள், 1½ லட்சத்துக்கு அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்திய இந்த கொடிய தொற்றை இந்திய எல்லைக்குள் இருந்து விரட்டியடிக்க மத்திய அரசு மிகுந்த அக்கறை எடுத்து செயல்படுகிறது. இதனால் தடுப்பூசி தயாரிக்கும் பணிகளில் அரசும், பிரதமர் மோடியும் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர்.
கண்ணுக்குத்தெரியா இந்த வைரசிடம் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் ஜெட் வேகத்தில் நடந்து வருகின்றன. உள்நாட்டில் சொந்தமாக தயாரிப்பது மட்டுமின்றி, பிற நாடுகள் உருவாக்கிய தடுப்பூசிகளை இந்தியாவில் தயாரிக்கும் பணிகளும் வேகமெடுத்து வருகின்றன.
பிரதமர் மற்றும் அரசின் இந்த அக்கறையாலும், பல மாதங்களாக இரவு-பகலாக நடந்து வந்த ஆய்வுப்பணிகளின் பலனாகவும் முதற்கட்டமாக 2 தடுப்பூசிகள் தற்போது மக்களை காக்கும் ஆயுதங்களாக உருவாகி இருக்கின்றன.
பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘கோவேக்சின்’ தடுப்பூசியும், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசி, ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் சீரம் நிறுவனத்தின் தயாரிப்பிலும் பயன்பாட்டுக்கு தயாராகி இருக்கின்றன.
இவ்வாறு தடுப்பூசிகளின் தயார் நிலை, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான மாநிலங்களின் முன் தயாரிப்புகள் அனைத்தும் சிறப்பாக இருப்பதை உறுதி செய்தை தொடர்ந்து, இந்த தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது.
பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடந்த உயர்மட்டக்குழுவின் ஆலோசனைக்குப்பின், வருகிற 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என சுமார் 3 கோடி பேருக்கும், பின்னர் 50 வயதை கடந்தவர்கள், 50 வயதுக்கு உட்பட்ட நோயாளிகள் என சுமார் 27 கோடி பேருக்கும் இந்த தடுப்பூசி போடப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை இந்த ஆட்கொல்லி வைரசால் இதுவரை 8 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 12 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தங்கள் இன்னுயிரை கொரோனாவிடம் பறிகொடுத்து உள்ளனர்.
எனவே இந்த பெருந்தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு மாநில அரசும், சுகாதாரத்துறையும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக தடுப்பூசி தயாரானவுடன் அவற்றை பயன்படுத்தி மக்களை பாதுகாப்பதற்கு முனைப்பாக செயல்பட்டு வந்தன.
தற்போது தடுப்பூசி போடும் திட்டம் தொடங்க இருக்கும் நிலையில், அவற்றுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் முழுவீச்சில் செய்து வருகின்றன. குறிப்பாக தடுப்பூசிகளை வைப்பதற்கு குளிர்பதனவசதிகளை ஏற்படுத்துதல், ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டுள்ளன.
முக்கியமாக, அனைத்து மாவட்டங்களிலும் 190 மையங்களில் 2 கட்டங்களாக தடுப்பூசி திட்ட ஒத்திகை நடத்தப்பட்டு எந்தவித குறையும் இல்லாமல் தடுப்பூசி போடும் பணிகளை தொடங்குவதற்கான தயார் நிலை உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்த உடன் தமிழக அரசு முதல் கட்டமாக 6 லட்சம் அரசு, தனியார் மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கும், மருத்துவம் சாரா பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் தயார்நிலையில் வைத்திருக்கிறது. வருகிற 16-ந் தேதி தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிய உடன் 2 அல்லது 3 வாரத்துக்குள் அவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிக்கப்படும். இப்போது நாங்கள் மராட்டிய மாநிலம் புனேயில் இருந்து விமானம் மூலம் தடுப்பூசி எப்போது வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
தடுப்பூசி சென்னைக்கு வந்த உடன், முதலில் சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய அரசின் கிடங்குக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து குளிர்சாதன வசதி உள்ள வேன்கள் மூலம் 10 மண்டல கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் குளிர்சாதன வசதி கொண்ட வேன்களில் சென்னை உள்பட மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவையால் பிரத்தியேகமாக ஏற்படுத்தப்பட்ட 51 நடமாடும் குளிர்சாதன வசதி கொண்ட கிடங்குகளுக்கு (வாக்கிங் கூலர்) அனுப்பி வைக்கப்படும்.
இதற்கு அடுத்தகட்டமாக 2,618 பெரிய மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு குளிர்சாதன வசதியுடன் எடுத்துச்செல்லவும், அங்கு சேமித்து வைக்கவும் திட்டம் தயார்நிலையில் உள்ளது. தடுப்பூசி போடுவதற்கு தேவையான சிறிய அளவிலான குளிர்சாதன பெட்டிகளும் அனைத்து இடங்களில் வைப்பதற்கு தயார் நிலையில் உள்ளது. தடுப்பூசி போடுவதற்காக பிரத்தியேகமாக 28 லட்சம் சிரிஞ்சிகள் மற்றும் ஊசிகள் வரப்பெற்று, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அனைத்து மாவட்டங்களில் 226 இடங்களில் தடுப்பூசி போடும் ஒத்திகை வெற்றிக்கரமாக நடந்தது. பணியாளர்களுக்கும் தேவையான பயிற்சிகளுக்கும் அளிக்கப்பட்டுவிட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் 16-ந் தேதி தொடங்கும் நிலையில், தமிழகத்தில் இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அன்றைய தினம் மதுரையில் அல்லது சென்னையில் தொடங்கி வைப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
இவ்வாறு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்துகிறார். இதில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொள்கிறார்.
கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை மாநில அரசுகள் எவ்வாறு செய்துள்ளன? அதற்காக எவ்வாறு தங்களை தயார்படுத்தியுள்ளன? மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நிலவரம் எவ்வாறு இருக்கிறது? முறையாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? பரிசோதனைகள் போதுமான அளவு செய்யப்படுகிறதா? என்பதை முதல்-மந்திரிகளிடம், பிரதமர் மோடி கேட்டு அறிந்துகொள்கிறார்.
மேலும் கொரோனா தடுப்பூசி போடும்போது மாநில அரசுகள் கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பிரதமர் மோடி, முதல்-மந்திரிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார்.
‘கோவிஷீல்டு', ‘கோவேக்சின்' ஆகிய 2 தடுப்பூசிகளை அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்ட பிறகு, மாநில முதல்-மந்திரிகளை பிரதமர் மோடி சந்தித்து பேசுவது இதுவே முதல் முறையாகும்.
தடுப்பூசி தயாரிக்கும் பணிகள்
தயார்
16-ந் தேதி முதல்...
தமிழக அரசு தீவிரம்
திட்ட ஒத்திகை
51 குளிர்சாதன கிடங்குகள்
28 லட்சம் சிரிஞ்சிகள் மற்றும் ஊசிகள்
பிரதமர் மோடி ஆலோசனை
No comments:
Post a Comment