அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி சட்டம் கொண்டு வந்ததாக தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது
இடஒதுக்கீடுதமிழகத்தில் மருத்துவ படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
நீதிபதி பொன்.கலையரசன்அரசு பள்ளி மாணவர்களும், பொருளாதார ரீதியில் பின் தங்கிய மாணவர்களும் மருத்துவ படிப்பில் சேர ஏதுவாக அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்ய ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 10 சதவீதத்திற்கும் குறையாமல் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்தது. அந்த பரிந்துரையின் அடிப்படையிலேயே, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. அதற்கு கவர்னர் ஒப்புதல் பெறப்பட்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இடஒதுக்கீட்டிலும் கூட ‘நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை வழங்கப்படும். இந்த சட்டத்தின்படி நடப்பு கல்வியாண்டில் 435 அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர்ந்து உள்ளனர். இந்த சட்டத்தை இயற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது.
தலையிட முடியாதுஅரசு பள்ளி மாணவர்களுக்கு சமவாய்ப்பு வழங்கும் வகையில், அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய விரிவான ஆய்விற்கு பிறகே இந்த சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. விதிமீறல் இல்லாதபோது அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. நீதிபதி பொன்.கலையரசன் குழு நடத்திய ஆய்வில் அரசு பள்ளி மாணவர்கள் பின்தங்கிய நிலையில் இருப்பது தெரியவந்தது. அவர்கள் நீட் தேர்வில் பங்கேற்க பல்வேறு தடைகள் இருப்பதாலேயே ஊக்குவிக்கும் வகையில் இந்த சட்டம் இயற்றப்பட்டது. ‘நீட்' தேர்வை பொறுத்தவரை அரசு பள்ளி மாணவர்கள் 700-க்கு 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்ததில்லை. அவர்களுக்கு உரிய வாய்ப்பை ஏற்படுத்தி தரவே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் தனியார் பள்ளி மாணவர்கள் முன்னேறியவர்களாக உள்ளனர். இவர்களோடு அரசு பள்ளி மாணவர்களை ஒப்பிட முடியாது.
பதில் அளிக்க வேண்டும்இடஒதுக்கீடு கொடுத்தாலும், நீட் தேர்வில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்குத்தான் இடங்கள் ஒதுக்கப்படுகிறது. 7.5 சதவீதம் என்பது உள் ஒதுக்கீடாக மட்டுமே வழங்கப்படுகிறது. சட்டம் கொண்டு வந்ததற்கான நோக்கம் குறித்து மனுதாரர்கள் தவறான குற்றச்சாட்டுகளை மனுவில் கூறியுள்ளனர். எனவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அரசின் பதில் மனுவுக்கு, பதில் அளிக்க மனுதாரர்கள் தரப்பில் அவகாசம் கேட்டதால், வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். புதுச்சேரி அரசு மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதனால், இந்த வழக்கிலும் மத்திய அரசு பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment