தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதியை ஒட்டி நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் பல மாவட்டங்களில், கன மழைக்கு வாய்ப்புள்ளது.
இன்று ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய கன மழை முதல், மிக கன மழை வரை பெய்யும். சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய கன மழை பெய்யும்.நாளை திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும்.
விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். தென்மேற்கு வங்கக்கடல், குமரி கடல், மன்னார் வளைகுடா, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று வீசுவதால், 13ம் தேதி வரை மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும்.
சில இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதிகபட்சம், 29 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும்.நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல், திருவாடானையில், 7 செ.மீ., மழை பெய்துள்ளது. ஆர்.எஸ்.மங்களம், மணமேல்குடி, 6; சாத்தான்குளம், தொண்டி, 5; மணிமுத்தாறு, பீளமேடு, 4 செ.மீ., மழை பதிவானது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment