சென்னை :
''இந்தியாவில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, பெரிய அளவில் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும்,'' என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேசினார்.
சென்னை, போரூர் ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், 32வது பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது.இதில், 94 மாணவர்களுக்கு தங்க பதக்கம்; சிறப்பு மருத்துவம், முதுகலை, பட்ட படிப்பு மாணவர்கள், 1,266 பேருக்கு சான்றிதழ்களையும், வேந்தர் வெங்கடாசலம், இணை வேந்தர் செங்குட்டுவன், துணைவேந்தர் விஜயராகவன் ஆகியோர் வழங்கினர்.நிகழ்ச்சியில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேசியதாவது:கொரோனா தொற்றை தடுக்க, மத்திய அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்போது, கொரோனா தொற்றுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த பெருந்தொற்றில் இருந்து மக்கள் விடுபட, பெரிய அளவிலான தடுப்பூசி திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. பல ஆண்டுகளாக கடுமையாக மேற்கொண்ட திட்ட பலன்களை, கொரோனா தொற்று சீர்குலைத்து உள்ளது. ஊரடங்கால், பல இடர்பாடுகளும், பொருட்கள் வழங்கலில் தடைகளும், உற்பத்தி திறன்களில் மாற்றங்களும் ஏற்பட்டுள்ளது. தற்போது, 1,700 நோயாளிகளுக்கு ஒரு டாக்டர் என்று இருப்பதை, 1,000 நோயாளிகளுக்கு ஒரு டாக்டர் என்ற நிலையை எட்ட வேண்டும்; இதற்காக, எல்லா மாவட்டங்களிலும், ஒரு மருத்துவ கல்லுாரி துவங்கப்படும்.
மேலும், 10 ஆயிரம் பேருக்கு, ஒன்பதாக உள்ள மருத்துவ படுக்கைகளை, 40 ஆக உயர்த்தியும், காப்பீட்டில் மருத்துவ சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை, 8 சதவீதத்தில் இருந்து, 10 சதவீதமாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றும் முன்கள பணியாளர்கள் அனைவரையும் வணங்குகிறேன். ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு தனி பிரிவும், தடுப்பூசிக்கான சோதனை மையத்தை ஏற்படுத்தியதற்காக பாராட்டுகிறேன். இந்திய பல்கலைகளில், ராமச்சந்திரா, 28 வது இடத்தையும், மருத்துவ கல்லுாரியில், 13வது இடத்தையும், பல் மருத்துவ கல்லுாரியில், 7 வது இடத்தையும் பிடித்துள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.
No comments:
Post a Comment