நானோ தொழில்நுட்பமும், வேலைவாய்ப்புகளும்..! - EDUNTZ

Latest

Search here!

Saturday, 30 January 2021

நானோ தொழில்நுட்பமும், வேலைவாய்ப்புகளும்..!

நானோ தொழில்நுட்பமும், வேலைவாய்ப்புகளும்..! 


 அறிவியல் துறையின் அடுத்த பரிணாமம் நானோ தொழில்நுட்பம். இயற்பியல், வேதியியல், ஒளியியல் மற்றும் காந்தவியல், மருத்துவ இயல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நானோ தொழில்நுட்பம் புதுமையை விளைவித்து வருகிறது. ஒவ்வொரு துறையிலும் நம்ப முடியாத வளர்ச்சிக்கும், புதுமைக்கும் நானோ தொழில்நுட்பம் வழிவகுத்துள்ளது. நாளைய உலகம் நானோ விஞ்ஞானத்தின் கையில் என்றால் மிகையில்லை. வாய்ப்புமிக்க நானோ அறிவியல் தொழில்நுட்ப படிப்புகளைப் பற்றி திருவள்ளூர் மாவட்டம் சிறுவானூரைச் சேர்ந்த வசந்தன் விளக்குகிறார். இவர் சென்னையில் முதுநிலை நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பட்டம் பெற்று, தைவான் பல்கலைக்கழகத்தில் நானோ எலக்ட்ரானிக்ஸில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். 

அதோடு நானோ தொழில்நுட்பம் சார்ந்த முதுகலை முனைவர் ஆராய்ச்சி களை இங்கிலாந்தில் மேற்கொண்டிருக்கிறார். நானோ தொழில்நுட்பம் சார்பான பல ஆராய்ச்சிகளுக்காக 20-க்கும் மேற்பட்ட நாடுகளை சுற்றி வந்திருக்கும் வசந்தன், அத்துறை பற்றி விளக்குகிறார். "மிக நுண்ணிய அலகு நானோ எனப்படுகிறது. ஒரு மீட்டரில் 100 கோடியில் ஒரு பங்குதான் நானோ மீட்டர். நுண்ணிய நானோ தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டுதான், எல்லா துறைகளிலும் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. எலக்ட்ரானிக்ஸில் மட்டுமல்ல இயற் பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட துறைகளையும் ஆட்சி செய்யப்போவது நானோ தொழில்நுட்பம்தான். நமது உலகமே நானோ மயமாக மாறி வருகிறது எனும் அளவுக்கு நானோ மெட்டீரியல்ஸ், நானோ மருத்துவம், நானோ உயிரி தொழில்நுட்பம், நானோ லித்தோகிராபி, நானோ எலக்ட்ரானிக்ஸ், நானோ மேக்னடிக்ஸ், நானோ ரோேபாட்ஸ், நானோ பயோ உபகரணங்கள் என்று விரிந்துகொண்டே செல்கிறது நானோ துறை" என்று கூறிய வசந்தன், நானோ தொழில்நுட்பம் கால்பதித் ததுறைகளை பட்டியலிட்டார். "நானோ தொழில்நுட்பம் மருத்துவத் துறையில் வியத்தகு சாதனைகள் பலவற்றை அறிமுகம் செய்து வருகிறது. நானோ ரோபோக்கள் உடலுக்குள் ஊடுருவி சிகிச்சை அளிக்கத் தொடங்கி உள்ளன. 

மருந்துகள் நேரடியாக பாதிக்கப்பட்ட உடலுறுப்புகளை சென்றடையவும், பாதிப்புடைய பகுதிகளை துல்லியமாக கண் காணித்து சிகிச்சை அளிக்கவும் மருத்துவ உலகம் நானோ பயன்பாட்டை கையிலெடுக்கத் தொடங்கி உள்ளது. நவீன நானோ மருத்துவ உத்திகளின் பயனாக மூளைக்கட்டி, புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை முற்றிலும் குணப்படுத்தும் சாத்தியக்கூறுகள் உருவாகி வருகிறது. மருத்துவத் துறை மட்டுமல்லாது அறிவியலின் அனைத்து துறைகளிலும் நானோ ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. வானூர்திகளின் பாகங்களை எளிதில் வடிவமைக்க நானோ நுட்பம் கைகொடுக்கிறது. எரிபொருள் சிக்கனத்தை ஏற்படுத்தும் நானோ வாகனங்களால் ஆட்டோமொபைல் துறையும் வளர்ச்சி காண்கிறது. நவீன வகை ஆயுதங்கள் மற்றும் அதிக ஆயுள் கொண்ட செயற்கைக் கோள் வடிவமைப்பில்கூட நானோ தொழில்நுட்பம் தனது பங்களிப்பை செய்துள்ளது. எரிபொருள் பயன்பாட்டை முற்றிலும் குறைத்து பால்வீதியெங்கும் வலம் வரப்போகின்றன நானோ விண்கலங்கள். இப்படி மின்னணுவியல், கணினியியல், எந்திர வியல், உயிரித் தொழில்நுட்பம் என அனைத்து அறிவியல் துறை களிலும் நானோ தொழில்நுட்ப பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது" என்றவர், நானோ துறையில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக எலக்ட்ரானிக் கருவிகளின் உயிர்நாடியான டிரான்ஸிஸ்டரை நானோ தொழில்நுட்பத்தின்படி மிக நுண்ணிய அளவில் உருவாக்கி அசத்தியிருக்கிறார். 14 நானோமீட்டர் அளவிலான டெக்னாலஜியை உலகமே கொண்டாடிக்கொண்டிருக்க, இவர் அதைவிட மிக நுண்ணிய அளவில், அதாவது 3 நானோமீட்டர் அளவிலான டெக்னாலஜியை உருவாக்கி அசத்தி யிருக்கிறார். நானோ தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை பற்றி அவர் கூறியது: "எதிர்கால முன்னேற்றத்தில் நானோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி முதன்மை இடத்தை பிடிக்கும் என்று கருதப்படுகிறது. அதற்கேற்ப நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், சந்தை வளர்ச்சியும் இருக்கும் என்றும் நிபுணர்கள் கணிக்கிறார்கள். 

உலக நாடுகள் பலவற்றிலும் நானோ தொழில்நுட்பத்தை பற்றிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு அதிக தொகை செல விடப்படுகிறது. இந்தியாவிலும் மத்திய மற்றும் மாநில அரசுகளும், ஆராய்ச்சி நிறுவனங்களும் நானோ ஆராய்ச்சி திட்டங்களை நிதி ஒதுக்கி செயல் படுத்தி வருகின்றன. நானோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப அத்துறையில் சிறப்புமிகு பட்டப்படிப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த துறையில் பட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள், டிப்ளமோ படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்வோருக்கு பிரகாசமான எதிர்காலமும் உள்ளது. நல்ல வருவாயும், எதிர்காலமும் உறுதி" என்று நானோ தொழில்நுட்பத்தை கொண்டாடும் வசந்தன், அதில் இருக்கும் வேலைவாய்ப்பு மற்றும் வெளி நாடுகளில் வழங்கப்படும் படிப்பு களையும் விளக்குகிறார். "இந்தியாவில் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் உள்பட ஏராளமான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நானோ படிப்புகள் உள்ளன. தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பல தனியார் கல்வி நிறுவனங்களில் இளநிலை தொழில்நுட்ப படிப்புகள் உள்ளன. இவற்றில் சில கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பும் படிக்க முடியும். ஒவ்வொரு கல்லூரியிலும் இருக்கும் நானோ படிப்பின் உட்பிரிவுகளையும், அவற்றின் எதிர்கால வாய்ப்புகளையும் நன்கு அறிந்து கொண்டு படிப்பை தேர்ந்தெடுக்கலாம். வெளிநாடுகளில் மேற் படிப்புகளை மேற்கொள்ளும்போது, இத்துறை சம்பந்தமான விஞ்ஞானிகளின் தொடர்பும், ஆராய்ச்சி சம்பந்தமான வேலைவாய்ப்புகளும் பிரகாசமாகும். 

 அதேபோல இந்திய இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் சம்பளத்துடன்கூடிய கல்வியும் காத்திருக்கிறது. தைவான், இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, ரஷியா போன்ற நாடுகளில் `பெலோஷிப்' எனப்படும் ஆராய்ச்சி படிப்புகளை வழங்கி, அதற்கு `ஸ்டைபன்' முறையில் குறிப்பிட்ட சம்பளத்தையும் வழங்குகிறார்கள். அதனால் நிறைய தமிழர்கள் இப்போது வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில், நானோ தொழில்நுட்பத்தை இலவசமாக பயின்றுவருகிறார்கள். பல ஆராய்ச்சிகளில் உதவு கிறார்கள். நாட்டின் அனைத்து துறை களிலும் நானோ தொழில்நுட்ப பயன்பாடு உள்ளது. எனவே எல்லா துறைகளிலும் நானோ அறிவியல் படிப்பு படித்தவர் களுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும், மருத்துவ மனைகள், மருந்தகங்கள், மருந்து தொழிற்கூடங்கள், உபகரண தயாரிப்பு நிறுவனங்கள், வாகன உற்பத்தி மையங்கள் உள்ளிட்ட ஏராளமான துறைகளில் வாய்ப்பை பெறலாம்" என்ற நம்பிக்கை வார்த்தைகளோடு விடைகொடுக்கும் வசந்தன், நானோ தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனத்தை இந்தியாவில் தொடங்கும் முயற்சிகளிலும் இறங்கி உள்ளார்.

No comments:

Post a Comment