இன்று தைப்பூசம்
முதல் முறையாக அரசு விடுமுறை
ரேஷன் கடைகளும் இயங்காது
முருகப்பெருமானுக்கு பல்வேறு வகையான விழாக்கள் எடுத்தாலும் தைப்பூசம் தனி சிறப்பம்சம் கொண்டது. முருகப்பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையான விரதமாக கருதப்படுகிறது. தமிழகத்தைப் போலவே மலேசியா, மொரீசியஸ், இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இலங்கை, மொரீசியஸ் போன்ற நாடுகளில் தைப்பூசம் தினத்தன்று அரசு விடுமுறை விடப்படுகிறது.
தமிழ்நாட்டிலும் தைப்பூசத்தை அரசு விடுமுறை நாளாக அறிவிக்கவேண்டும் முருக பக்தர்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை ஏற்று, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5-ந்தேதி வெளியிட்ட அறிவிப்பில், தைப்பூசம் திருவிழாவான 28-ந்தேதி (இன்று) பொது விடுமுறை என்றும், இனி வரும் ஆண்டுகளிலும் தைப்பூசம் திருவிழா நாள் பொது விடுமுறை பட்டியலிலும் சேர்க்க உத்தரவிட்டுள்ளதாகவும் அறிவித்தார். இந்த அறிவிப்பின்படி, முதல் முறையாக தைப்பூசம் திருவிழாவுக்கு இன்று அரசு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
தைப்பூசத்தை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment