அரசு டாக்டர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வை மீண்டும் நடத்தக்கோரிய வழக்கிற்கு பதிலளிக்க வேண்டும் மருத்துவக்கல்வி இயக்குனருக்கு ஐகோர்ட்டு உத்தரவு 


 தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்களுக்கான பணிமாற்றம் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் காது, மூக்கு, தொண்டை டாக்டர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வை மீண்டும் நடத்தக்கோரி, தேனி மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியர் தங்கராஜ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், ‘மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் பற்றிய விவரங்களை வெளிப்படையாக அறிவிக்காமல் கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது. காது, மூக்கு, தொண்டை பிரிவில் சென்னை, செங்கல்பட்டு, மதுரை, கன்னியாகுமரி உள்பட 9 மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டநிலையில், மேலும் 5 கல்லூரிகளில் அந்தப் பணியிடங்கள் காலியாக உள்ளது தெரியவந்துள்ளது. 14 கல்லூரிகளில் காலியிடங்கள் இருந்தும், 9 கல்லூரிகளில் உள்ள காலியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டது தன்னிச்சையானது. எனவே பதவி உயர்வுக்கான கலந்தாய்வை மீண்டும் நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், நாளை (திங்கட்கிழமை) பதில் அளிக்கும்படி மருத்துவக் கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்டார்.

Post a Comment

Previous Post Next Post

Search here!