மாணவியின் மருத்துவப் படிப்புக்கு உதவிய பள்ளி ஆசிரியர்கள்
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அரசு கொண்டு வந்த 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவ படிப்புக்குச் செல்லும் ஏழைக் குடும்பத்து மாணவிக்கு அவர் படித்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உதவித் தொகையாக ரூ.56,700 செவ்வாய்க்கிழமை வழங்கினர்.
பஞ்சநதிக்குளம் கிழக்கு கிராமத்தில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தவர் மருதூர் தெற்கு கிராமத்தைச் சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளியான செல்வராசு மகள் லட்சுமி பிரியா. இவருக்கு அரசின் சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் சென்னை சுயநிதி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
மாணவியின் குடும்பச் சூழல் நடைமுறை செலவுக்குக் கூட வசதியில்லாத நிலை. இதனைக் கருத்தில் கொண்டு, மாணவி படித்த பள்ளியின் ஆசிரியர், ஆசிரியைகள் பங்களிப்புத் தொகையாக ரூ.56,700 மாணவிக்கு வழங்கப்பட்டது.
பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் ஜி.ரமேஷ் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் வேலாயுதம், ஊராட்சித் தலைவர் வீரதங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment