புத்தகத்தைப் பார்த்துத் தேர்வெழுதியும் தோல்வி: - EDUNTZ

Latest

Search Here!

Friday, 8 January 2021

புத்தகத்தைப் பார்த்துத் தேர்வெழுதியும் தோல்வி:

புத்தகத்தைப் பார்த்துத் தேர்வெழுதியும் தோல்வி: விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யக் கோரி காரைக்கால் அரசுக் கல்லூரி மாணவிகள் மனு 

புத்தகத்தைப் பார்த்துத் தேர்வெழுதியும் தோல்வி அடைந்ததால், தங்களது விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி, காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் அரசு கல்வியியல் கல்லூரி மாணவிகள் 3 பேர், புதுச்சேரி கல்வி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணனிடம் இன்று (ஜன.7) மனு அளித்தனர். பெருந்தலைவர் காமராஜர் கல்வியல் கல்லூரியில், ஆசிரியர் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்த மாணவிகள் மா.கோகிலா, ந.அர்ச்சனா, மா.ஷபானா பிர்தேஸ் ஆகிய 3 பேரும், தாங்கள் ஆன்லைன் மூலம் தேர்வு எழுதியதில் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சியடையவில்லை என்றும், பல்கலைக்கழகம் நிகழாண்டு மறு மதிப்பீடு இல்லை என்று மறுத்துவிட்டதாகவும், காரை மாவட்டப் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் எல்.எஸ்.பி.சோழசிங்கராயரிடம் மனு அளித்து முறையிட்டனர். இதையடுத்து சோழசிங்கராயர் மற்றும் மாணவிகள் 3 பேரும், புதுச்சேரி கல்வி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணனை, அவரது வீட்டில் நேரில் சந்தித்துக் கோரிக்கை குறித்து எடுத்துக் கூறி மனு அளித்தனர். அம்மனுவில், ''காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரியில் நாங்கள் 3 பேரும் பி.எட். இறுதியாண்டு படித்தோம். கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில், புதுவை பல்கலைக்கழக்த்தால் ஆன்லைன் மூலம் (திறந்த புத்தக அமைப்பு) நடத்தப்பட்ட தேர்வில் பங்கேற்றுத் தேர்வெழுதினோம். எங்கள் கல்லுரியில் படிக்கும் 95 மாணவர்களில் நாங்கள் 3 பேர் மட்டும், ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில் மறுமதிப்பீடு செய்வதற்கான வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால் கடந்த ஜன.5-ம் தேதி புதுவை பல்கலைக்கழகத்தின் வழியாகக் கல்லூரிக்கு வந்த தகவலின் அடிப்படையில், நிகழாண்டு மறு மதிப்பீடு இல்லை என்பது தெரிய வந்தது. இதுவரை நாங்கள் 3 பேரும் எந்தவொரு பாடத்திலும் தோல்வியுற்றது இல்லை. இதனால் எங்களின் ஓராண்டு காலம் வீணாகிவிடும் என்ற அச்சம் எங்களுக்கும், குடும்பத்தாருக்கும் ஏற்பட்டுள்ளது. அதனால் எங்கள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு எங்கள் விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து காரை மாவட்டப் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சோழசிங்கராயர் கூறும்போது, ''இம்மாணவிகள் தேர்வெழுதிய விடைத்தாள் நகல்களைப் படித்துப் பார்த்த பேராசிரியர்கள், விடைகள் சரியாக எழுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர். மூவரும் நன்றாகப் படிக்கக் கூடிய மாணவிகள் என்பதைக் கல்லூரி முதல்வரும் உணர்ந்துள்ளார். புத்தகத்தைப் பார்த்து எழுதலாம் என்ற நிலையில், எவ்வாறு இப்படி நிகழ்ந்தது எனத் தெரியவில்லை. அனைத்து விவரங்களும் அமைச்சரிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்'' என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment