கோவிட் காரணமாக வேலை இழந்த உதம்பூர் இன்ஜினீயர் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு இன்று கணிசமான வருவாயை ஈட்டி வருகிறார்.
இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட கரோனா லாக்டவுன் பலரின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது. இதில் பன்னாட்டு நிறுவனங்களில் லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் உயர்மட்டப் பணியாளர்களிலிருந்து கட்டிட வேலை செய்யும் சாதாரணத் தொழிலாளிகள் வரை பலரும் ஊர் திரும்ப வேண்டிய நிலைக்கு ஆளாகினர்.
இதில் காஷ்மீர் மாநிலம், உதம்பூரைச் சேர்ந்த இன்ஜினீயர் ராகேஷ் சர்மாவும் விதிவிலக்கல்ல. எனினும் அவர் நிலைமையைப் புரிந்துகொண்டு முற்றிலும் புதிய பாதைக்கு தனது வாழ்க்கையை மாற்றிக்கொண்டார்.
லாக்டவுனில் வாழ்வாதாரத்தை இழந்த பின்னர், நல்ல வருமானம் இன்றி வறுமைக்குத் தள்ளப்பட்ட ராகேஷ் சர்மா, தனது பழைய வேலையை மீண்டும் எதிர்பார்க்கவில்லை. விவசாயத்திலும் அவரால் சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை. அதனால் அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகளைக் கேட்டார். வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக புதிய விவசாய முறைகளைக் கற்றார். காளான் உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கினார்.
காளான் வளர்ப்பு குறைந்த முதலீடு மற்றும் குறைந்த இடத்துடன் தொடங்கக்கூடிய மிகவும் லாபகரமான ஒன்றாக அறியப்படுகிறது. இதன் காரணமாக, ஜம்மு-காஷ்மீரில் உள்ள பல இளைஞர்கள் காளான் வளர்ப்பில் ஈர்க்கப்படுகிறார்கள். இதுவும் வேலைவாய்ப்பை உருவாக்குகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்மனிர்பர் பாரத் முயற்சியில் இருந்து உத்வேகம் பெற்ற பின்னர் காளான் விவசாயியாக மாறிவிட்ட ராகேஷ் சர்மா, கோவிட் -19 ஊரடங்கின்போது உற்பத்திக் கூடத்தைத் தொடங்கினார். அவரிடம் இப்போது 5 பேர் பணியாற்றுகிறார்கள்.
இதுகுறித்து ராகேஷ் சர்மா கூறியதாவது:
"கோவிட் லாக்டவுனில் நான் பணியாற்றி வந்த இன்ஜினீயர் வேலையையும் இழந்துவிட்ட பிறகு நான் வீட்டிற்குத் திரும்பவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நல்ல வருமானத்தையும் இழந்துவிட்டேன். தொடர்ந்து எனது வாழ்க்கையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலே இந்தக் காளான் பண்ணையைத் தொடங்க முக்கியக் காரணமானது. மேலும் வேலையின்மை அதிகமாக இருப்பதால் என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதும் அவசியம் என்று உணர்ந்தேன். மோடி ஜியின் ஆத்மனிர்பர் முயற்சியிலிருந்து நான் உத்வேகம் பெற்றேன்.
டாக்டர் பனார்ஜி எனக்கு வழிகாட்டினார். மூங்கிலால் செய்யப்பட்ட தற்காலிக குடிசையிலிருந்தே வேளாண்மைத் துறை உதவியுடன் காளான் உற்பத்தியைத் தொடங்கினேன். வேளாண் துறையும் எனக்குத் தொழில்நுட்ப உதவிகளை வழங்கியது.
தற்போது கிடைத்துவரும் எனது வருவாய் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பயிரிட, சுத்தம் செய்ய, பார்சல் கட்ட என ஐந்து பணியாளர்களை இப்போது வேலைக்கு அமர்த்தியுள்ளேன்.''
இவ்வாறு ராகேஷ் சர்மா தெரிவித்தார்.
ராகேஷ் சர்மாவின் ஊழியர்களில் ஒருவரான அபிஷேக் சர்மா கூறுகையில், "ஜம்மு-காஷ்மீரில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியுள்ளது. எனவே, இந்த முயற்சியைத் தொடங்குவதற்கு உதவி புரிந்ததற்காக ராகேஷ் சாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
காளான் மேம்பாட்டுத் துறையின் உதவியாளர் சுனில் குப்தா ராகேஷ் சர்மா முயற்சியைப் பாராட்டினார்.
இதுகுறித்து குப்தா கூறுகையில், "தனது தொழிலைத் தொடங்க தன்னிடம் ஒரு கொட்டகை இல்லை என்று ராகேஷ் என்னிடம் கூறினார். அரசாங்கம் அவருக்கு மானியம் வழங்கியது. ஒரு பொறியியலாளராக அவர் இதை மிகச் சிறப்பாகச் செய்தார். மூங்கில் கட்டமைப்பை அவரே கட்டினார். உற்பத்திக் கூடத்தை மிகவும் சிறப்பாக நிறுவியதன் மூலம் ஒரு நல்ல வேலை செய்துள்ளார். அவர் மற்ற இளைஞர்களுக்கு ஒரு உத்வேகம்" என்றார்.
No comments:
Post a Comment