கோவில்களில் காலி பணியிடங்கள் நிரப்ப அறநிலையத் துறை தீவிரம் 


 அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் கோவில்களில் உள்ள, காலி பணியிடங்களை நிரப்பும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 38 ஆயிரத்து, 652 கோவில்கள் உள்ளன.கோவில் நிர்வாகத்திற்காக, ஆணையர், அலுவலர்கள், சார்நிலை அலுவலர்கள், செயல் அலுவலர்கள், அயல்பணி அலுவலர்கள், அலுவலக உதவியாளர்கள், காவலர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளடங்கிய, 2,409 அங்கீகிரிக்கப்பட்ட பணியிடங்கள் உள்ளன. இது இல்லாமல், நிர்வாக வசதிக்காக அந்தந்த கோவில் சார்பில், பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.கோவில்களில் பெறப்படும் தரிசனக் கட்டணம், உண்டியல் வருவாய், கோவில்களின் சொத்து, கடைகள் வாயிலாக கிடைக்கும் வாடகை ஆகியவை வாயிலாக பராமரிப்பு பணி, ஊழியர்கள் சம்பளம், வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், நிர்வாக வசதிக்காக கோவில்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைஎழுந்தது.

இதையடுத்து, அரசின் உத்தரவுப்படி, காலி பணியிடங் களை நிரப்ப, அறநிலையத்துறை கமிஷனர் பிரபாகர் சமீபத்தில் உத்தர விட்டார். உத்தரவில் கூறியிருப்பதாவது:

அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்களில், அத்தியாவசிய தேவை அறிந்து, கோவில் நிதிக்கு இழப்பு ஏற்படாத வகையில், பணியாளர்களை நியமித்துக் கொள்ளலாம்.கோவிலுக்கு நிர்ணயிக்கப் பட்டு உள்ள உச்சவரம்பு அளவீடுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கோவில்களுக்கான உதவித் தொகை நிர்ணய வருவாயில், பணியாளர்களுக்கான சம்பள செலவு, நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்சவரம்புக்குள் இருக்க வேண்டும்.அதை உறுதி செய்த பிறகே, காலி பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.கோவிலுக்கு அவசியமான, தவிர்க்க முடியாத பணியிடங்களை நிறைவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை, திருச்செந்துார், ராமேஸ்வரம் உள்ளிட்ட, பல பிரசித்தி பெற்ற கோவில்களில், அர்ச்சகர், அலுவலக தட்டச்சர், இளநிலை மின் பொறியாளர், பிளம்பர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும்படி கோரப்பட்டுள்ளது.இந்த வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், தேவையான பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன.தேர்வாணையம் வாயிலாக நியமனம்?அறநிலையத்துறை கோவில்களில் பணிபுரிவதற்கான அனைத்து பதவிகளையும், அந்தந்த கோவில் நிர்வாகத்தின் வாயிலாக நிர்ணயிக்கப்படுகிறது. அவ்வாறு நிர்ணயிக்கும்போது, லோக்கல் அரசியல் தலைவர்கள், கட்சியினர் சிபாரிசு செய்பவர்களே பணியில் நியமிக்கப்படுகின்றனர்.அவ்வாறு நியமிப்பவர்கள், அரசியல் பின்புலத்தால், சில நேரங்களில் கோவில் செயல் அலுவலர், உதவிக் கமிஷனரைவிட அதிகாரம் படைத்தவர்களாக, வலம் வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால், கோவில் நிர்வாக சீர்கேடு ஏற்படுவதோடு, முறைகேடு, திருட்டு ஆகியவற்றுக்கு வழி வகுக்கிறது. எனவே, அறநிலையத்துறை சார்ந்த அனைத்து பதவிகளையும், தேர்வாணையம் வாயிலாகவோ, அறநிலையத்துறை நேரடி தேர்வு நடத்தி, திறமையான, நம்பிக்கையான, இறைபக்தி கொண்டவர்களை நியமித்தால், சம்பந்தப்பட்ட பதவிகளுக்கு மதிப்பு இருக்கும் என, ஆன்மிக நல விரும்பிகள் கோரியுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post

Search here!