அரசுப் பள்ளிகளில் நுழைவுத் தேர்வு (Entrance Exam) பயிற்சி மையங்கள் அமைக்க வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு


 தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் நுழைவுத்தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கக்கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான நீட், பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கு ஏராளமான பயிற்சி மையங்கள் உள்ளன. மருத்துவம், பொறியியல் தவிர்த்து மேலாண்மையியல், சட்டம், கல்வியியல், கணக்குத் தணிக்கைவியல், விவசாயம், கவின்கலை என பல்வேறு துறைகளில் உயர் படிப்புகள் உள்ளன. இப்படிப்புகளில் சேர தேசிய அளவில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்க பயிற்சி மையங்கள் இல்லை. எனவே, தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் அனைத்து உயர் படிப்புகளுக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக பயிற்சி அளிக்கும் மையங்கள் திறக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை பிப். 4-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Post a Comment

Previous Post Next Post

Search here!