தெரிந்து கொள்வோம் : கண் இன்றி பணியாற்றும் கரையான் கரையான், 


சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கும் முன்பாகவே இந்தப் பூமியில் வாழ்ந்து வரும் உயிரினமாக கண்டறியப்பட்டிருக்கிறது. கரையான்களை `வெள்ளை எறும்புகள்' என்றும் அழைப்பார்கள். இவை எறும்புகளைப் போல காணப்பட்டாலும், உயிரின வகைப்பாட்டின் படி, இவை எறும்புகளில் இருந்து முற்றிலும் வேறுபடுகின்றன. கரையான்களில், உலகம் முழுதும் சுமார் 275 பேரினங்களும், சுமார் 2750 சிற்றினங்களும் உள்ளன. கரையான்கள் தங்களது வாழ்விடத்தை, சூழ்நிலைகளுக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கின்றன. மண்ணுக்கு மேல், மண்ணுக்கு கீழ், மரங்களில் என்று மூன்று விதமான சூழல்களில், ஏதெனும் ஒன்றை தேர்ந்தெடுத்து அதற்கு தகுந்தபடி தன்னுடைய இருப்பிடத்தை அமைத்துக் கொள்கின்றன. ஒரு கரையான் புற்றுக்குள் 500 முதல் 5 லட்சம் மற்றும் அதற்கும் அதிகமான கரையான்கள் கூட்டமாக வாழும். கரையான்கள் அதிக ஈரப்பதமாகவும், அதிக உலர்வாகவும் இல்லாத, எளிதாக தண்ணீர் வடியக்கூடிய பகுதியை தேர்ந்தெடுத்துத் தங்களின் புற்றுகளை அமைக்கின்றன. கரையான் புற்றுக்கும், இயற்கைச் சூழலுக்கும் நல்ல உறவு உள்ளது. ஓரிடத்தில் எந்த மாதிரியான தாவரம் வளரும், அங்கு சுற்றுச்சூழலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதையெல்லாம், அந்தப் பகுதியில் இருக்கும் கரையான் புற்றுக்களைக் கொண்டு அறியலாம் என்கிறார்கள், விஞ்ஞானிகள். கரையான்களும், தேனீக்களைப் போலவே ஒரு சமுதாய பூச்சி ஆகும். ஏனெனில் கரையான்களால், தனித்து வாழ முடியாது. ஒரு கரையான் கூட்டத்தில் ராணிக் கரையான், மன்னர் கரையான், ராணுவ வீரர்கள் மற்றும் பணியாளர் கரையான்கள் என நான்கு வகை இருக்கும். ராணுவ வீரர்களிலும் கூட இரண்டு வகைகள் உண்டு. இதில் முதல் வகை பருத்த தலையுடன், முகத்தில் ஒரு பிரத்யேக அரிவாள் போன்ற கொடுக்கைக் கொண்டிருக்கும். இவை பகைவர்களை தாக்குதல் நடத்தி விரட்ட பயன்படுகின்றன. அடுத்த வகை, பகைவர்களின் மீது துர்நாற்றம் மிக்க சுரப்பினைத் துப்பி விரட்டிவிடும். பணியாளர் கரையான்களுக்கு புற்றினை கட்டுதல், பழுதடைந்த புற்றினை சரிசெய்தல், இளம் கரையான், ராணுவ வீரர்கள், மன்னர் மற்றும் ராணி கரையான் களுக்கு உணவு கொடுத்தல் என பல வேலைகள் இருக்கின்றன. ராணுவ வீரர் கரையான்கள் மற்றும் பணியாளர் கரையான்களில் ஆண்-பெண் இருபாலருமே உண்டு. ஆனால் அவர்களுக்கு கண் தெரியாது. இனப்பெருக்கம் செய்யவும் முடியாது. மன்னர் கரையானுக்கு இனப்பெருக்கம் செய்வது மட்டும்தான் வேலை. ராணி கரையானுக்கு இனப்பெருக்கம் செய்வது, பிற கரையான்களுக்கு பணிக்குரிய கட்டளையிடுவது, வழிநடத்துவது போன்றவை பிரதானப் பணி. ராணி கரையான், ஒரு நாளைக்கு சுமார் 2 ஆயிரம் முட்டைகள் வரை இடும். மணிசேகர், 10-ம் வகுப்பு, அரசினர் உயர்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம்.

Post a Comment

أحدث أقدم

Search here!