சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு - EDUNTZ

Latest

Search here!

Wednesday, 3 February 2021

சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு மே 4-ந்தேதி தொடங்கி ஜூன் 11-ந்தேதி நிறைவு பெறுகிறது 



 சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி, பொதுத்தேர்வு வருகிற மே மாதம் 4-ந்தேதி தொடங்கி ஜூன் மாதம் 11-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.
சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு
சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தொடங்கி நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வழக்கத்தை விட தாமதமாக தொடங்கும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தற்போதைய கொரோனா சூழலுக்கு மத்தியில் தேர்வுக்கு 3 மாதங்களில் தயாராகுவதற்கு ஏதுவாக 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற மே மாதம் 4-ந்தேதி தொடங்கி ஜூன் மாதம் 11-ந்தேதி வரை நடைபெற இருப்பதாகவும், அதில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 4-ந்தேதி தொடங்கி ஜூன் மாதம் 7-ந்தேதி வரையிலும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 4-ந்தேதி தொடங்கி ஜூன் மாதம் 11-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளதாக சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அட்டவணையை நேற்று வெளியிட்டுள்ளது. 2 ஷிப்டுகளில் தேர்வு அந்த அட்டவணையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரையில் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை தேர்வு நடைபெற இருக்கிறது என்றும், அதேபோல், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலும், சில நாட்களில் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் என 2 ஷிப்டுகளில் நடக்கிறது என்றும் கூறப்பட்டு இருக்கிறது. அதாவது, பிற்பகலில் நடக்கும் தேர்வு நாட்களின் காலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுகின்ற காரணத்தினாலேயே 12-ம் வகுப்புக்கு பிற்பகலில் தேர்வு நடத்தப்படுவதாகவும், காலையில் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், பணியாளர்கள் பிற்பகலில் நடைபெறும் தேர்வு பணிகளில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள் எனவும் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் காலையில் நடைபெறும் தேர்வுக்கு 10 மணிக்குள்ளும், பிற்பகலில் நடக்கும் தேர்வுக்கு 2 மணிக்குள்ளும் தேர்வு அறைக்குள் வந்துவிட வேண்டும். தேர்வுகள் தொடங்குவதற்கான முந்தைய 30 நிமிடத்தில், முதல் 15 நிமிடம் விடைத்தாளில் மாணவர்களின் விவரங்களை குறிப்பிடுவதற்கும், அதற்கு அடுத்த 15 நிமிடங்கள் வினாத்தாளில் உள்ள வினாக்களை வாசிப்பதற்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
39 நாட்களில்...
10-ம் வகுப்புக்கு மொத்தம் 75 பாடப்பிரிவுகளுக்கும், 12-ம் வகுப்புக்கு மொத்தம் 111 பாடப்பிரிவுகளுக்கும் இந்த நாட்களில் தேர்வு நடைபெற உள்ளது. வருகிற மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் செய்முறைத் தேர்வு தொடங்கும் என்றும், தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் 15-ந்தேதி அறிவிக்கப்படும் என்றும் சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி குறுகிய நாட்களில் நடத்தி முடிக்கப்பட இருக்கிறது. உதாரணமாக கடந்த ஆண்டில் (2020) 45 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்ட பொதுத்தேர்வை, இந்த ஆண்டு 39 நாட்களிலேயே முடிப்பதற்கு ஏற்றவாறு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.இ. நிர்வாகம் கூறி இருக்கிறது. தேர்வு அட்டவணையை வெளியிட்டு பேசிய மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால், ‘பொதுத்தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார்நிலையில் இருக்கிறது. மாணவர்கள் எந்தவித அச்சமும், பதற்றமும் இன்றி பொதுத்தேர்வை எதிர்கொள்ள வேண்டும்' என்றார்.

No comments:

Post a Comment