மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு
நாடு முழுவதும் 135 நகரங்களில் நடந்தது
மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக சேருவதற்கு மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் (சிடெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அந்த வகையில் 14-வது மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஆண்டு (2020) ஜூலை மாதம் 5-ந் தேதியன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது.
இந்த தேர்வு முதலில் 112 நகரங்களில் நடைபெற இருந்தது. கொரோனா காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு ஏதுவாக 135 நகரங்களில் நடத்தப்படும் என்று தேர்வுகளை நடத்தும் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, நாடு முழுவதும் 135 நகரங்களில் 2 ஆயிரத்து 935 தேர்வு மையங்களில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு நேற்று நடந்தது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய 4 நகரங்களில் நடைபெற்றது. சென்னையில் 9 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை எடுக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தாள்-1 தேர்வும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தாள்-2 தேர்வும் நடத்தப்படும். அந்த வகையில் நேற்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை தாள்-1 தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை தாள்-2 தேர்வும் நடைபெற்றது.
No comments:
Post a Comment