தமிழகத்தில் வாக்குப்பதிவு நேரம் 1 மணி அதிகரிப்பு: சுனில் அரோரா - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 11 February 2021

தமிழகத்தில் வாக்குப்பதிவு நேரம் 1 மணி அதிகரிப்பு: சுனில் அரோரா

தமிழகத்தில் வாக்குப்பதிவு நேரம் 1 மணி அதிகரிப்பு: 


சுனில் அரோரா தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவாகும் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். மேலும், கரோனா சூழல் காரணமாக, வாக்குச்சாவடிகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வசதியாக வாக்குப்பதிவு நடைபெறும் நேரம் 1 மணி அதிகரிக்கப்பட்டுள்ளது எனறும் அவர் தெரிவித்தார். 

 சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து தமிழக அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தமிழக அரசின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இரண்டு நாள்களாக ஆலோசனை நடத்திய நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்துள்ளார். சென்னையில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சுனில் அரோரா விளக்கம் அளித்து வருகிறார். அப்போது அவர் கூறியதாவது, மே 24-ம் தேதியுடன் தமிழக சட்டப்பேரவையின் பதவிக் காலம் நிறைவு பெறுகிறது. தமிழகத்தில் 234 தொகுதிகளில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டியுள்ளது. 

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. வாக்குப்பதிவு முடிந்து இரண்டு நாள்களில் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாகவே இருக்கும். வழக்கம் போலவே வரும் தேர்தலிலும் அதிகமான வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கிறோம். அதே வேளையில், இந்த முறை வாக்கு சதவீதத்தை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். கரோனா சூழலில் பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்த வேண்டியது அவசியம். வாக்காளர்கள் எவ்வித தயக்கமும் இன்றி வாக்குச்சாவடிக்கு வர நடவடிக்கை எடுக்கப்படும். 

கரோனா பரவல் அதிகமாக இருந்தபோதே பிகாரில் பேரவைத் தேர்தல் நடத்திக் காட்டினோம். புதிய வாக்காளர்கள், பெண்கள், முதியவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் குறைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது என்று சுனில் அரோரா கூறினார். மேலும் அவர் பேசுகையில், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, தமிழகத்தில் வாக்குச்சாவடி மையங்கள் 68 ஆயிரத்திலிருந்து 93 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 



அதாவது ஏற்கனவே இருப்பதைவிட தற்போது 25 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்படும். தமிழகத்தில் அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஞ்சல் முறையில் வாக்களிக்கும் திட்டத்துக்கு அரசியல் கட்சிகள் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கின்றன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சிறப்பு பார்வையாளர்கள் இரண்டு பேர் நியமிக்கப்படுவார்கள். SOURCE NEWS

No comments:

Post a Comment