'2 ஜி.பி., டேட்டா'வால் பயன்.. 62,000 மாணவர்கள்! பேராசிரியர்களும் எதிர்பார்ப்பு - EDUNTZ

Latest

Search here!

Thursday, 4 February 2021

'2 ஜி.பி., டேட்டா'வால் பயன்.. 62,000 மாணவர்கள்! பேராசிரியர்களும் எதிர்பார்ப்பு

'2 ஜி.பி., டேட்டா'வால் பயன்.. 62,000 மாணவர்கள்! பேராசிரியர்களும் எதிர்பார்ப்பு 


 தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள, '2 ஜி.பி., டேட்டா' திட்டத்தால், கோவையில் மொத்தம், 62 ஆயிரம் மாணவ - மாணவிகள் பயனடைகின்றனர். தங்களுக்கும் இத்திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டுமென, கொரோனாவால் பற்றாக்குறை வருமானத்தில் சிக்கி தவிக்கும், தனியார் கல்லுாரி பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா காரணமாக கல்லுாரிகள் மூடப்பட்டு, இறுதியாண்டு முதுகலை, இளங்கலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களை தவிர்த்து, பெரும்பாலான மாணவர்கள் வீட்டில் இருந்தபடி, ஆன்லைன் மூலம் படித்து வருகின்றனர். பேராசிரியர்கள்,'ஆன்லைன்' மூலம் பாடம் நடத்தி வருகின்றனர்.வசதியற்ற ஏழை மாணவர்கள் பலர், ஆன்லைன் வகுப்புக்கு தேவையான டேட்டா கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். இக்கட்டணத்தை சம்பாதிக்க, ஓட்டல்கள், மால்களுக்கு பகுதி நேர வேலைகளுக்கு சென்று, சமாளித்து வருகின்றனர். 

 இப்பிரச்னை, தமிழக அரசின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.இதையடுத்து, 'ஆன்லைன்' வகுப்புகளில் அனைத்து மாணவர்களும், கலந்து கொள்ள ஏதுவாக, ஜன., முதல் ஏப்., வரையிலான நான்கு மாதங்களுக்கு, '2 ஜி.பி., டேட்டா' வழங்கப்படும் என்றும், 'எல்காட்' நிறுவனம் மூலம், 'விலையில்லா டேட்டா கார்டு' வழங்கப்படும் என்றும், கடந்த மாதம் தமிழக முதல்வர் அறிவித்தார்.அறிவித்தபடியே, '2 ஜி.பி. டேட்டா' வழங்கும் திட்டத்தை, முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்துள்ளார். இத்திட்டம் மூலம் மாநிலம் முழுவதும், 9 லட்சத்து, 69 ஆயிரத்து, 47 மாணவ, மாணவிகள் பயனடைய உள்ளனர். கோவை மண்டலத்தில், 62 ஆயிரத்து, 109 மாணவ-மாணவிகள் பயனடைய உள்ளனர். கோவை மண்டல கல்லுாரி இணை இயக்குனர் முனைவர் கலைசெல்வி கூறுகையில், ''கோவை மண்டலத்தில், '2 ஜி.பி., டேட்டா' திட்டம் மூலம் பயனடைய உள்ள மாணவ, மாணவிகளின் பட்டியல், கல்லுாரிகள் தோறும் சேகரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

 இதன்படி, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக் கல்லுாரிகள், இன்ஜி., கல்லுாரிகள், மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லுாரி மாணவ மாணவியர், 62 ஆயிரம் பேர் பயனடைய உள்ளனர்,'' என்றார். 'எங்களுக்கும் வேண்டும்'மாணவர்களுக்கு கல்லுாரி பேராசிரியர்கள் ஆன்லைன் மூலமே, வகுப்புகளை நடத்தி வருகின்றனர். தற்போது உள்ள சூழலில், பல்வேறு தனியார் கல்லுாரிகளில் கொரோனா காரணமாக பேராசிரியர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களை போன்று, தங்களுக்கும் டேட்டா திட்டம் வழங்க வேண்டும் என, தனியார் கல்லுாரி பேராசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment