கல்லூரி மாணவர்களுக்கு ‘2 ஜி.பி. டேட்டா' வழங்கும் திட்டம் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார் 




 கல்லூரி மாணவர்களுக்கு ‘2 ஜி.பி. டேட்டா' வழங்கும் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். ‘தினமணி' நாளிதழுக்கு தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் விருதையும் அவர் வழங்குகிறார். ‘2 ஜி.பி. டேட்டா’ கொரோனா பெருந்தொற்று காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் இணையவழி (ஆன்லைன்) வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்த வகுப்புகளில் வீட்டில் இருந்தவாறு மாணவர்கள் பங்கேற்று, தங்களுடைய பாடத்திட்டங்களை படித்து வருகின்றனர். இணையவழி வகுப்புகளில் மாணவர்கள் கலந்துகொள்ள ஏதுவாக அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 மாதங்களுக்கு ‘2 ஜி.பி. தரவு' (‘2 ஜி.பி. டேட்டா') வழங்கப்படும் என்றும், எல்காட் நிறுவனத்தின் மூலமாக விலையில்லா ‘தரவு அட்டைகள்' (‘டேட்டா கார்டு') வழங்கப்படும் என்றும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 10-ந் தேதி அறிவித்து இருந்தார். அதன்படி, கல்லூரி மாணவர்களுக்கு ‘2 ஜி.பி. டேட்டா' வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியிட்டு 3 வார காலத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சி.பா.ஆதித்தனார் விருது இதைத்தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியில், சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகள், திருவள்ளுவர் திருநாள் விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கி, எடப்பாடி பழனிசாமி கவுரவிக்கிறார். தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்களுடைய பெயரில் விருதுகளை ஏற்படுத்தி, தமிழக அரசு வழங்கி வருகிறது. அதன்படி, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நாளிதழ் விருது ‘தினமணி' நாளிதழுக்கு வழங்கப்படுகிறது. தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் வார இதழ் விருது ‘கல்கி' வார இதழுக்கும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் மாத இதழ் விருது ‘செந்தமிழ்' மாத இதழுக்கும் வழங்கப்படுகிறது. இதேபோன்று பல்வேறு தலைவர்கள், அறிஞர்கள் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள விருதுகளும், விருதாளர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

Post a Comment

Previous Post Next Post

Search here!