தேர்வு முறைகேடு குறித்து விரிவான விசாரணை:
742 கணினி ஆசிரியர்கள் நியமனம் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது
ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கணினி ஆசிரியர்கள் பணியிடத்துக்கான தேர்வு முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்தவேண்டும் என்றும், 742 கணினி ஆசிரியர்கள் நியமனம் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தேர்வு முறைகேடு
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 814 கணினி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தியது. இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.
அந்த வழக்குகளில், 175 மையங்களில் நடந்த தேர்வில் முறைகேடுகள் நடந்தன. தேர்வு அறைக்குள் செல்போன் பயன்படுத்தப்பட்டது. 3 மணி நேரத்துக்குமேல் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டது. எனவே இந்த தேர்வில் தேர்வானவர்கள் பட்டியலை ரத்து செய்யவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
பணி நியமனம்
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன், 3 தேர்வு மையங்கள் தவிர மீதமுள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதி தேர்வாகிய விண்ணப்பதாரர்களுக்கு பணி நியமனம் வழங்கும் நடைமுறைகளை மேற்கொள்ள அரசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
அதேசமயம், 3 தேர்வு மையங்களில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஒருநபர் குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், அனைத்து தேர்வு மையங்களிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
நீதிபதி அறிக்கை
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ‘தனி நீதிபதி உத்தரவின்படி, 742 பேர் தேர்வுசெய்யப்பட்டு, பணி நியமனம் அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி, தனது விசாரணை அறிக்கையை சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையைப் பார்த்தபின் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்' என்று வாதிட்டார்.
தீர்ப்புக்கு கட்டுப்பட்டது
அதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதிகள், ‘கணினி ஆசிரியர் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக அனைத்து மையங்களுக்கும் சேர்த்து விரிவான விசாரணையை அரசு மேற்கொள்ள வேண்டும். அதன் அறிக்கையை வருகிற ஏப்ரல் 30-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
விசாரணையின்போது, அனைத்து தேர்வு மையங்களின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு செய்யவேண்டும். பதிவுகள் இல்லாதபட்சத்தில் தேர்வு எழுதியவர்களை அழைத்து விசாரிக்கலாம். ஏற்கனவே நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் நியமனம், தனிநீதிபதியின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது’ என்று கூறி வழக்கை முடித்துவைத்தனர்.
No comments:
Post a Comment