கை வண்ணம்... கலை நயம்...! பள்ளி சுவரில் கொரோனா விழிப்புணர்வு சித்திரம்:ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் ஏற்பாடு - EDUNTZ

Latest

Search here!

الثلاثاء، 16 فبراير 2021

கை வண்ணம்... கலை நயம்...! பள்ளி சுவரில் கொரோனா விழிப்புணர்வு சித்திரம்:ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் ஏற்பாடு

கை வண்ணம்... கலை நயம்...! பள்ளி சுவரில் கொரோனா விழிப்புணர்வு சித்திரம்:ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் ஏற்பாடு 


 பெ.நா.பாளையம்:ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் சார்பில், கொரோனா தொற்று குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளி சுவர்களில், மாணவ, மாணவியர் சித்திரங்கள் வரையும் போட்டி துவக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில், கொரோனா தொற்று காரணமாக, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே ஏற்பட்டுள்ள மன ரீதியான அச்சத்தைப் போக்கி, தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற வகையில், விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகிறது.

இந்நிலையில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் குறிக்கோள் மற்றும் செயல்பாடுகள் சார்ந்தும், குறிப்பாக, குழந்தைகளின் கல்வி உரிமை, பெண் கல்வி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் தன் சுத்தம், சுகாதாரம் சார்ந்த பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே சுவர் சித்திரங்கள் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு சுவர் சித்திரங்கள் போட்டிகள் நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இதுகுறித்து, கல்வித் துறையினர் கூறியதாவது:

மாநில திட்ட இயக்கம் வாயிலாக, மொத்தம் பத்து வகையான விழிப்புணர்வு சுவர் சித்திரங்கள் வடிவமைக்கப்பட்டு, ஒவ்வொரு ஓவியத்துக்கும், அளவுகளும் குறிக்கப்பட்டுள்ளன. ஓவியங்கள், பொதுமக்கள் பார்வைக்கு நன்கு தெரியும்படியான சுவர்கள் உள்ள பள்ளிகள், படங்களின் அளவுகளுக்கு ஏற்ப சுற்றுச்சுவர் வசதி உள்ள பள்ளிகள், மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்படுகின்றன.


முதற்கட்டமாக, பள்ளி சுவர்களில் திறமைமிக்க ஓவியர்களை கொண்டு, எனாமல் அல்லது ஆயில் பெயின்ட் வாயிலாக படங்கள் வரையப்படுகிறது. அந்தந்த வட்டாரத்துக்கு உட்பட்ட ஆசிரியர் பயிற்றுனர், தொடர்புடைய பள்ளியின் பள்ளி தலைமை ஆசிரியருடன் கலந்தாலோசித்து, அப்பள்ளியில் படங்கள் வரைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தவிர, பள்ளி அளவில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர் வீட்டிலிருந்தபடியே ஓவியங்கள் வரையச் செய்து, தபால் மற்றும் வாட்ஸ்- ஆப் வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ பள்ளிக்கு அனுப்ப செய்து, அவற்றிலிருந்து சிறப்பாக வரைந்த மாணவர்களை தேர்வு செய்து பரிசு வழங்குகிறோம்.

மேலும், சுவரோவியங்கள் வரைவதற்கு தேர்வு செய்யப்படும், 5 மாணவர்களை, பெற்றோரை அழைத்து வந்து, அவர்கள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்கலாம். மாணவர்கள், பெற்றோர் ஒப்புதல் கடிதத்துடன் பள்ளிக்கு வரவேண்டும். பள்ளியில் சுவர் ஓவியம் வரைதல் போட்டிகள் நடத்தப்பட்டு, சிறந்த மூன்று ஓவியங்கள் வரைந்த மாணவர்களுக்கு, ரொக்கப் பரிசுகள் வழங்கவும், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, கல்வித்துறையினர் கூறினர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق