ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற காஞ்சி மாணவி 


 காஞ்சிபுரத்தில், பள்ளி மாணவி ஒருவர், ஒரு நிமிடத்தில், 59 விலங்குகள் பெயர் மற்றும் அதன் ஆயுட்காலத்தை சொல்லி, ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்று உள்ளார். காஞ்சிபுரம், டெம்பிள் சிட்டி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி, விஜயபிரபா தம்பதி மகள், பாக்கியலட்சுமி, 15. அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு விலங்குகள் பற்றி தெரிந்து கொள்வதில், ஆர்வம் இருந்துள்ளது.

அதனால், அதை பற்றி தெரிந்து கொண்டார். மேலும், இது குறித்து சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக, ஒரு மாதமாக அதற்கான பயிற்சி எடுத்துக் கொண்டார். தினசரி விலங்குகள் பெயர், அதன் ஆயுட்காலத்தை தெரிந்து, வேகமாக ஒப்பிவித்து, பயிற்சி எடுத்து வந்தார்.


இந்நிலையில், நேற்று காலை, ஆசிய சாதனை புத்தகம் பொறுப்பாளர் விவேக் முன்னிலையில்,இதற்கான நிகழ்ச்சி நடந்தது. அவர்கள், திரையில் ஒவ்வொரு விலங்கு படத்தை ஒளிபரப்பி வந்தனர். 'அதன் பெயர் மற்றும் அதன் ஆயுட்காலத்தை சொல்ல வேண்டும்' என்றனர்.

அதன்படி, பாக்கியலட்சுமி, ஒரு நிமிடத்தில், 59 விலங்குகள் பெயர் மற்றும் அதன் ஆயுட்காலத்தை சொல்லி, சாதனை படைத்தார். இதற்கான சான்றிதழை, பொறுப்பாளர் வழங்கினார். ஆசிய சாதனை புத்தக பொறுப்பாளர் விவேக் கூறியதாவது:


ஆசிய சாதனை புத்தகத்தில், விலங்குகள் பிரிவில், ஒரு நிமிடத்தில், 40 பெயர் சொன்னவர் தான், இடம் பெற்றிருந்தார். தற்போது, விலங்குகள் பெயருடன், அதன் ஆயுட்காலத்தையும்சேர்த்து பாக்கியலட்சுமி கூறியதால், அந்த சாதனையை முறியடித்து உள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

Search here!