தினம் ஒரு தகவல் - அதிகரிக்கும் பெண்கள் புற்றுநோய் ஆபத்து!
அண்மையில் மறைந்த புற்றுநோய்ப் போராளி மருத்துவர் சாந்தா கலந்துகொண்ட கடைசி நிகழ்வில், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வெளியிட்டுள்ள ஒரு திட்ட அறிக்கை நம்மை யோசிக்க வைக்கிறது. தமிழகத்தில் வருடந்தோறும் ஆண்களைவிடப் பெண்களுக்குப் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துவருவதாக அந்த அறிக்கை எச்சரிக்கிறது. அது தந்துள்ள புள்ளிவிவரம் இது: தமிழகத்தில் 11 பேரில் ஒருவருக்குப் புற்றுநோய் வரும் ஆபத்து காத்திருக்கிறது.
2016-ல் மட்டும் 65, 590 புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அதில் 28,971 பேர் ஆண்கள்; 36,619 பேர் பெண்கள். இவர்களில் மார்பகப் புற்றுநோய் பாதிப்புள்ளவர்கள் 24.7% பேர்; கருப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்புள்ளவர்கள் 19.4% பேர். நிகழாண்டில் புதிய புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 78 ஆயிரத்தைத் தாண்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
பொதுவாக, புற்றுநோய் நம்மைத் தாக்குவதற்கு நவீன வாழ்க்கைமுறைகளே வழி கொடுக்கின்றன.
நுரையீரல் புற்றுநோய்க்குப் புகைப்பழக்கமும் வாய்ப் புற்றுநோய்க்குப் புகையிலை போடுவதும் பான்மசாலா மெல்லுவதும் அதிமுக்கியக் காரணிகள். மார்பகப் புற்றுநோயும் பெருங்குடல் புற்றுநோயும் துரித உணவுக்கும் உடற்பருமனுக்கும் தொடர்புடையவை. பெண்களிடம் அழகு சாதனப் பயன்பாடு அதிகரிப்பது சருமப் புற்றுநோயை வரவேற்கிறது. உடலியக்கம் குறைவதும் உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கைச் சூழலும் தொடர்ந்து பல மணி நேரம் அமர்ந்தே பார்க்கும் பணிச் சூழல் அதிகமானதும் புற்றுநோய் பாதிப்பு உச்சம் நோக்கிச் செல்வதற்குப் பல வாசல்களைத் திறக்கின்றன.
No comments:
Post a Comment