வியாழனின் சிவப்பு புள்ளி காரணம் என்ன? 


 சூரியக் குடும்பத்தில் மிகப் பெரிய கிரகமான வியாழன் பல விசித்திரங்களை கொண்ட கிரகமாகும். அத்தகைய விசித்திரங்களில் ஒன்று அதன் மீது மிகப் பெரிய அளவில் இருக்கும் சிவப்பு புள்ளி. இது நீள் வட்டப்பாதையில் சுழலும் ஒரு புயல் போன்று உள்ளது. 

இது வியாழனின் மத்திய ரேகைக்கு தென் திசையில் அமைந்துள்ளது. இந்தப் புள்ளியை முதன் முதலாக கண்டுபிடித்தவர் ராபர்ட் ஹூக் என்ற பிரிட்டன் விஞ்ஞானி ஆவார். கண்டுபிடித்த ஆண்டு 1664. இதை பூமியிலிருந்து ஓரளவு சக்திகொண்ட டெலஸ்கோப் மூலம் தெளிவாக பார்க்கலாம். இந்தப் புள்ளியானது பூமியை போன்று மூன்று கோள்களை உள்ளடக்கிக்கொள்ளும் அளவிற்கு பெரியது. 

இது கடிகார திசைக்கு எதிர் திசையில் அதாவது வலமிருந்து இடமாக ஒருமுறை சுற்றி வர 6 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. சிவப்பு புள்ளியை பற்றிய ஆராய்ச்சி பல வருடங்களாக நடந்து வந்த போதிலும், அதனுடைய உண்மையான அமைப்பு பற்றி கண்டறியப்படவில்லை. அதனுள் நிலவும் தட்பவெப்ப நிலை பற்றியும் தெரியவில்லை. 

அதுபோக இந்தப் புள்ளியின் நிறமும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. கருஞ்சிவப்பும் பழுப்பு நிறமுமே மிக அதிகமாக காணப்படுகிறது. ஆனாலும் இந்த நிறமாற்றம் எதனால் ஏற்படுகிறது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. வியாழனின் மேற்பரப்பில் இருந்து கந்தக மூலக்கூறுகள் மேெலழுப்பப்பட்டு அது புற ஊதா கதிர்களினால் உடைக்கப்படுவதால் உருவாகும் புதிய கந்தக அணுக்களால் நிறம் மாறுவதாக ஒரு வழியாக யூகித்தார்கள். 

ஆனால் இப்போது டெலஸ்கோப் மூலம் ஆராய்ந்து பார்த்தபோது வியாழனின் மிகப் பெரிய சுழலும் புள்ளியும், அதன் காலநிலை வரைபடங்களும் முற்றிலும் மாறுபட்ட உண்மைகளை வெளிப்படுத்துகிறது. புகைப்படங்கள் காலநிலை மற்றும் அதன் வெப்பநிலை மாற்றங்களை பதிவு செய்தது. 

வெப்பக்காற்றின் சூழல்களும், அதனுள் குளிர்ந்த பகுதிகளும் சிவப்பு புள்ளியில் இருப்பதை காட்டியது நாசாவின் ஹப்பிள் டெலஸ்கோப். ஜப்பானின் தேசிய வானியல் ஆராய்ச்சி மையம் அகச்சிவப்பு கதிர் தொலைநோக்கியை கொண்டு நிறம் மற்றும் காற்றழுத்தம் ஆகியவற்றை ஆராய்ந்தபோது சுற்றுப்புறத்தைவிட சிவப்பு நிறத்தில் காணப்படும் பகுதிகளில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடுதலாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதனாலேயே இந்த புள்ளி அதிக சிவப்பாக தெரிவதாக அறிவித்திருக்கிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post

Search here!