எம்.டெக். படிப்புக்கான மாணவர் சேர்க்கையை ரத்து செய்தது ஏன்? பதில் அளிக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு - EDUNTZ

Latest

Search here!

Wednesday, 3 February 2021

எம்.டெக். படிப்புக்கான மாணவர் சேர்க்கையை ரத்து செய்தது ஏன்? பதில் அளிக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு

எம்.டெக். படிப்புக்கான மாணவர் சேர்க்கையை ரத்து செய்தது ஏன்? பதில் அளிக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு 


 எம்.டெக் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை ரத்து செய்தது ஏன்? என்பதற்கு விரிவான பதில் மனுவை இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் மாணவி சித்ரா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- இடஒதுக்கீடு பிரச்சினை அண்ணா பல்கலைக்கழகத்தில், பி.டெக் படிப்பில் 93.9 சதவீத மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளேன். இதன்பின்னர், எம்.டெக். பயோ டெக்னாலஜி, எம்.டெக். கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய முதுகலை படிப்பில் சேர அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பம் செய்தேன். 

ஆனால், இடஒதுக்கீடு பிரச்சினையால், இந்த 2 முதுகலை பட்டப்படிப்புகளுக்கும் நடப்பு கல்வியாண்டில் மாணவர்களை சேர்க்கவில்லை என்று கடந்த மாதம் 29-ந்தேதி அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த படிப்புகளுக்கு மத்திய அரசு இட ஒதுக்கீடான 49.5 சதவீத இடஒதுக்கீட்டை மட்டுமே வழங்க வேண்டும் என்று மத்திய அரசும், 69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசும் உத்தரவிட்டுள்ளது. மாணவர் சேர்க்கை இதனால், இந்த 2 முதுகலை படிப்புகளுக்கும் இந்த கல்வியாண்டு மாணவர்கள் சேர்க்கை நடத்தவேண்டாம் என்ற முடிவுக்கு பல்கலைக்கழகம் வந்துள்ளது. இந்த முடிவு சட்ட விரோதமானது. இந்த 2 படிப்புகளில் 45 மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் படித்து வந்தனர். 

இந்த மாணவர்களுக்கு சுமார் ரூ.12 ஆயிரம் வீதம் கல்வி உதவித்தொகையை மத்திய அரசு வழங்கியது. இதற்காக மத்திய அரசு இடஒதுக்கீட்டைத்தான் பின்பற்ற வேண்டும் என்று நிர்பந்திக்க முடியாது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நடைபெற்ற மோதலினால் 45 மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த 2 முதுகலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை ரத்து செய்து அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்றி இந்த படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரத்து ஏன்?
இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் சரவணன், “அந்தந்த மாநிலத்தில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையைத்தான் பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் நேற்று முன்தினம் (1-ந்தேதி) பல்கலைக்கழகம் மானியக்குழு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதுமட்டுமல்லாமல், இட ஒதுக்கீடு பிரச்சினை என்றால், அதை சரி செய்து மாணவர்களை சேர்க்க முயற்சிக்க வேண்டும். ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கையையே திடீரென ரத்து செய்வது, மாணவர்களின் எதிர்காலத்தை பாதிப்படைய செய்கிறது. பல்கலைக்கழகத்தின் செயல் நியாயமற்றது” என்று வாதிட்டார். இந்த வழக்கிற்கு பதில் அளிக்க அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை இன்று (புதன்கிழமைக்கு) தள்ளிவைத்த நீதிபதி, மாணவர் சேர்க்கையை ரத்து செய்தது ஏன்? என்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment