மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் - EDUNTZ

Latest

Search here!

Tuesday 16 February 2021

மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்

அரசு பதவி உயர்வுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்து மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு 


 தமிழகத்தில் அரசு பதவி உயர்வுக்கான இடஒதுக்கீடு, உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டப் பிரிவுகளை ரத்து செய்து, மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை 4 வாரத்தில் அமல்படுத்த தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கெடு விதித்துள்ளது.
ஐகோர்ட்டில் வழக்கு
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் (பணி நிபந்தனை) சட்டம் 2016-ல் அரசு ஊழியர்களின் பதவி உயர்வு இடஒதுக்கீடு அடிப்படையில் நடத்தப்படும் என்ற சட்டப் பிரிவுகளை ரத்து செய்யக்கோரியும், போட்டித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க உத்தரவிடக்கோரியும், ஈரோட்டை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராஜா, சென்னையை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மதிப்பெண் முறையில் பட்டியல் தயாரித்து அதனடிப்படையில் பதவி உயர்வு வழங்காமல் இடஒதுக்கீடு முறையில் பதவி உயர்வு வழங்கினால் ஏற்கனவே உள்ள இடஒதுக்கீட்டின் அளவு அதிகரித்துவிடும் எனக்கூறி அந்த சட்டப் பிரிவுகளை ரத்துசெய்தது. 


 மேலும் மக்கள் நலன் காக்கும் அரசு அனைவரின் நலனையும் மனதில் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் பகுத்தறிவுடன் கூடிய சமநிலையுடன் அரசு இருக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. எனவே, இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது சட்டவிரோதமானது. எனவே, மனுதாரர்களுக்கு பதவி உயர்வை மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட வேண்டும் எனவும் உத்தரவிட்டது
சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது, மேலும் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் சீனியாரிட்டியை கணக்கீட்டு, 8 வாரத்தில் பதவி உயர்வு வழங்க கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது. மேலும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய தமிழக அரசு, டி.என்.பி.எஸ்.சி.யின் மனுக்களையும் தள்ளுபடி செய்தது. அதேவேளையில் சுப்ரீம் கோர்ட்டு 8 வாரத்தில் தனது தீர்ப்பை அமல்படுத்த தவறிய தமிழக தலைமை செயலாளர் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது பதிலளிக்க, தலைமை செயலாளர் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது.

கூடுதல் அவகாசம்
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும், தீர்ப்பை இதுவரை தமிழக அரசு செயல்படுத்தவில்லை என வாதிட்டனர். தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை செயல்படுத்த 4 வார கால கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பதவி உயர்வுக்கான இடஒதுக்கீடு, உள்ஒதுக்கீடு வழங்கிய சட்டப் பிரிவுகளை ரத்து செய்து, போட்டி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை 4 வாரத்தில் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் தீர்ப்பு அமல்படுத்தப்படவில்லையெனில் தலைமை செயலாளர், டி.என்.பி.எஸ்.சி. செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்து, வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment

Comments System

[blogger][disqus][facebook]