நர்சிங் படிப்புக்கு ‘நீட்' தேர்வா? (தலையங்கம் - தினத்தந்தி)
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கு நடத்தப்பட்டுவரும் ‘நீட்’ தேர்வே, “எங்களுக்கு வேண்டாம், வேண்டாம்” என்று எல்லோரும் வலியுறுத்தி கொண்டிருக்கும் நேரத்தில், மருத்துவப்படிப்புகளுக்கு மட்டுமா?, இதோ இந்த ஆண்டு முதல் நர்சிங் படிப்புகளுக்கும் ‘நீட்’ தேர்வை கொண்டு வருகிறோம் என்ற முடிவை மத்திய அரசாங்கம் எடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
► இதையும்
படியுங்கள் தொடக்கப் பள்ளி (PRIMARY TEACHERS) ஆசிரியர்கள் கொரானா காலத்தில் பள்ளி செல்ல வேண்டுமா? CM CELL Reply
பல ஆண்டுகளாக பிளஸ்-2 பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண்களை அடிப்படையாக வைத்தே மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்துவந்த நிலையில், இந்தியா முழுவதும் “ஒரே நாடு, ஒரே தேர்வு” என்ற சித்தாந்தத்தை பின்பற்றும் மத்திய அரசாங்கம், 2016-ம் ஆண்டு முதல் மருத்துவ படிப்புகளுக்கு ‘தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத்தேர்வு’ என்று அழைக்கப்படும் ‘நீட்’ தேர்வை அறிமுகப்படுத்தியது.
தமிழ்நாட்டில் நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதிபெற்று அந்த ஒரு ஆண்டு மட்டும் நடத்தப்படவில்லை. அடுத்த ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. ‘நீட்’ தேர்வு கேள்விகள் மத்திய அரசின் கல்வித்திட்டத்தின் கீழ் கேட்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் பெரும்பாலான பள்ளிகள் மாநில கல்வித்திட்டத்தின் கீழேயே நடத்தப்படுவதால், நமது மாணவர்களால் அதில் அதிகளவில் வெற்றிபெற முடியவில்லை.
எனவே, தமிழக அரசு கடந்த ஆண்டு அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதால், 440-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இடம் கிடைத்தது. வழக்கமாக மே மாதம் ‘நீட்’ தேர்வு முடிந்து, மருத்துவக்கல்லூரிகளிலும், பல் மருத்துவக்கல்லூரிகளிலும் ஆகஸ்டு மாதம் மாணவர் சேர்க்கை நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் ‘நீட்’ தேர்வு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடந்தது. இந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் மூலமும், கல்வித்தொலைக்காட்சி மூலமுமே பாடங்கள் நடத்தப்பட்டன.
ஆண்டுக்கு ஒரு முறை என்று நடத்தப்படும் ‘நீட்’ தேர்வை, இனி இருமுறை எழுதலாம். எதில் அதிக மதிப்பெண்ணோ, அந்த மதிப்பெண்ணே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவித்துவிட்டு, இப்போது ஆகஸ்டு 1-ந்தேதி தேர்வு, ஆனால் இருமுறை அல்ல.
அந்த ஒரே தேர்வுதான். தேர்வுத்தாளில் பேனாவை வைத்துதான் எழுதும்முறை பின்பற்றப்படும். தேர்வுக்காக பாடத்திட்டங்கள் குறைக்கப்படாது என்று அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசாங்கம், இப்போது மருத்துவ படிப்புக்கு மட்டுமா? இந்த ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் மத்திய, மாநில அரசுகள், பி.எஸ்சி. நர்சிங் வகுப்புகளுக்கும், பி.எஸ்சி. வாழ்வியல் அறிவியல் பாடங்களுக்கும் மாணவர் சேர்க்கையை நடத்தவேண்டும் என்று கூறுவது நிச்சயம் ஏற்புடையது அல்ல.
ஏழை-எளிய கிராமப்புற மாணவர்கள் அதிலும் பெரும்பாலான மாணவிகள் நர்சிங் படிப்பையே விரும்பிச்சென்று படிக்கிறார்கள். நம்மால் மருத்துவம்தான் படிக்க முடியவில்லை. டாக்டராக முடியாவிட்டாலும், நர்சாக இருந்து மருத்துவ பணியாற்றலாம் என்ற நோக்கிலும், நர்சிங் படித்தால் தமிழ்நாட்டிலும், வெளிமாநிலங்களிலும், ஏன் வெளிநாடுகளிலும் நல்ல வேலைவாய்ப்பு இருக்கிறது என்ற வகையிலும், கிராமப்புற மாணவிகள் நர்சிங் படிப்பையே பெரிதும் விரும்புகிறார்கள்.
இதுவரை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு மூலமும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு அந்தந்த கல்லூரிகள் மூலமும் நர்சிங் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்திய நிலையில், இப்போது திடீரென்று நர்சிங் படிப்புகளுக்கு ‘நீட்’ தேர்வு என்பதை நிச்சயமாக தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழக அரசும், தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கப்போகும் புதிய அரசும், உடனடி பிரச்சினையாக இதை கையில் எடுத்துக்கொண்டு நர்சிங் மாணவர் சேர்க்கைக்கு ‘நீட்’ தேர்வு என்பதை மத்திய அரசாங்கம் கைவிட வலியுறுத்தவேண்டும்.
No comments:
Post a Comment