சிட்னியில் பேருந்து ஓட்டி அசத்தும் சென்னைப்பெண் - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 13 March 2021

சிட்னியில் பேருந்து ஓட்டி அசத்தும் சென்னைப்பெண்

சிட்னியில் பேருந்து ஓட்டி அசத்தும் சென்னைப்பெண் 


 மவுஸ்மி, வாழ்க்கையின் எதார்த்தத்தை உணர்ந்தவர். வாழ்வின் கடினமான சூழ்நிலைகளையும், சுலபமாக கடந்து சென்றவர். திருமணமான ஒன்றரை வருடங்களிலேயே கணவரை பிரிந்த மவுஸ்மி, இப்போது சிங்கிள் மதர். அதுவும் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பேருந்து ஓட்டுனராக மாறி, மகனை வளர்த்து வருகிறார். 

அவர் தனது போராட்ட வாழ்க்கையை பகிர்ந்து கொள்கிறார். உங்களை பற்றி கூறுங்கள்? தமிழ்நாடுதான் பூர்வீகம். இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவள். கம்ப்யூட்டர் சைன்ஸ் பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறேன். சென்னையில் இருக்கும் ஒரு கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கிறேன். 


 
 கல்லூரி பேராசிரியர் எப்படி பேருந்து டிரைவராக மாறினார்? ‘வாழ்க்கை’தான் என் நிலைமையை தலைகீழாக மாற்றிப்போட்டது. கல்லூரி பேராசிரியராக பணியாற்றியபோது, துபாயில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதை ஏற்றுக்கொண்டு, துபாய்க்கு பறந்தேன். அங்குதான் எனக்கு திருமணம் நிச்சயமாகி, நடந்து முடிந்தது. அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. எல்லாம், சரியாக நடந்து கொண்டிருந்த வேளையில், திடீரென குடும்ப உறவில் விரிசல் ஏற்படவே, நான் தமிழ்நாட்டிற்கு திரும்பிவிட்டேன். அப்போது என் மகனுக்கு ஒன்றரை வயது. 

 ஆஸ்திரேலியாவிற்கு சென்றது எப்படி? 

 தனி பெண்ணாக, சமூகத்தில் வாழ்வது ரொம்பவே கடினமானது. அதுவும் சிங்கிள் மதர் என்றால், ரொம்ப கஷ்டம். சமூகத்தின் ஏற்ற இறக்கமான பார்வையில் சிக்கிக்கொள்வதும், சீண்டல்களுக்கு ஆளாவதும் என பல சிரமங்களை கடந்தேன். அதேசமயம், பண தேவைக்கு ஏற்ற சரியான வேலையும் கிடைக்கவில்லை. அதனால் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்ல ஆவலாய் இருந்தேன். அப்போது என் நண்பர் ஒருவர், ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர ஆயத்தமானார். 


 
அவருக்கு உதவ சென்று, நான் ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்துவிட்டேன். குடும்ப சொந்தங்கள் உங்களை தடுக்கவில்லையா? நான் ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர விண்ணப்பித்த விஷயமும், விசா கிடைத்த விஷயமும் என் குடும்பத்திற்கே தெரியாது. சட்ட ரீதியாக விவாகரத்து பெற்று, குழந்தையை வளர்க்கும் உரிமைகள் எனக்கு கிடைக்க 4 வருடங்கள் தேவைப்பட்டது. அதுவரை வீட்டில் மவுனம் காத்து, எல்லாம் கிடைத்த பிறகே ஆஸ்திரேலியாவில் குடிபெயர இருப்பதை பற்றி கூறினேன். 

எல்லோருக்கும் பெரும் அதிர்ச்சி. இருப்பினும் அவர்களை ஆசுவாசப் படுத்தி, நான் ஆஸ்திரேலியாவிற்கு கிளம்பினேன். பழக்கம் இல்லாத நாட்டை எப்படி பழக்கமாக்கி கொண்டீர்கள்? ஆஸ்திரேலியா வந்ததும், வங்காள தேசத்து தம்பதிகளின் வீட்டில் ‘ஷேரிங்’ முறையில் தங்கி கொண்டோம். அங்கிருந்தபடி, கிடைக்கும் வேலைகளை செய்ய ஆரம்பித்தேன். பிறகு ஆஸ்திரேலியாவிலேயே ‘செக்யூரிட்டி’ பயிற்சி பெற்றேன். பிறகு இறைச்சி தயாரிக்கும் தொழிற்சாலையில் சில மாதங்கள், தனி பெண்ணாக காவல் காத்தேன். 

இப்படி எனக்கு கொஞ்சமும் பழக்கமில்லாத வேலைகளை பயின்று, பழக்கம் இல்லாத நாட்டில் வாழ பழகிக்கொண்டேன். பேருந்து ஓட்டுனராக மாறியது எப்படி? என்னுடைய மகன் வளர வளர, பண தேவைகளும் அதிகமானது. அதனால் நல்ல வருமானம் கிடைக்கும் தொழில்களை நாட வேண்டியிருந்தது. ஆஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டுனர்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கும். அதேபோல மரியாதையும் உண்டு. 



 
அதனால் முறைபடி ஓட்டுநர் பயிற்சி பெற்று, பேருந்து ஓட்ட ஆரம்பித்தேன். பேருந்து ஓட்டுநர் பணி சவாலானதா? நம்முடைய மனநிலையை பொறுத்துதான் இதற்கான பதிலும் அமையும். பேருந்து ஓட்டுனராக பணிக்கு சேர்ந்த முதல் 6 மாதங்கள், ரொம்ப கஷ்டப்பட்டேன். ஏனெனில் பெரிய வாகனத்தில், மக்களை ஏற்றிக்கொண்டு புதுப்புது நகரங்களுக்கு செல்லவேண்டும். ஆஸ்திரேலியாவில்தான் நான் கார் ஓட்ட பழகினேன். அதனால் அந்த அனுபவம் எனக்கு கைகொடுத்தாலும் பெரிய வாகனத்தை ரிவர்ஸ் எடுப்பது, குறுகிய சாலைகளில் திருப்புவது, பாதைகளை மனப்பாடம் செய்வது, இதற்கிடையில் பெண்களை வெறுக்கும் ஆண் பயணிகளின் ஏளன பேச்சு களையும் சமாளிக்க வேண்டும். அப்படி, இப்படி என முதல் 6 மாதங்கள் கடினமாகவே இருந்தது. 

இப்போது பழகிவிட்டது. எவ்வளவு பெரிய பேருந்தாக இருந்தாலும் சரி, ஆஸ்திரேலியாவின் எந்த நகரமாக இருந்தாலும் சரி, பயணிகளை பத்திரமாக கொண்டு சேர்த்து விடுவேன். ஆஸ்திரேலிய வாழ்க்கை உங்களுக்கு கற்றுக்கொடுத்த பாடம் என்ன? எல்லாமே புதிதுதான், நமக்கு பழக்கம் இல்லாத ஒன்றுதான். ஆனால் பழகி கொண்டால், கடினமான வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் என்பதைதான் ஆஸ்திரேலிய வாழ்க்கை எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது. 

 உங்களுடைய பேருந்து ஓட்டுநர் பணியில் கிடைத்த மறக்கமுடியாத அனுபவங்களை கூறுங்கள்? ஆஸ்திரேலியாவில் பள்ளி மாணவர்களிடம் மாட்டிக்கொண்டதை ஒருபோதும் மறக்கமாட்டேன். பணியில் புதிதாக சேர்ந்த சமயம் அது. ஆஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டுநர்கள், செல்போனை தொடவே கூடாது. அதனால் புது வழித்தடத்தில் பயணிக்கையில் கூகுள் மேப்ஸ் மூலம் வழி தேட முடியாது. 

பெரும்பாலும் பேருந்து வழித்தடங்களை மனப்பாடம்தான் செய்யவேண்டும். அத்தகைய சூழலில், ஒருமுறை பேருந்தில் ஏறிய பள்ளி மாணவர்கள் நான் தவறான பாதையில் ஓட்டி செல்வதாக என்னிடம் கூறினார்கள். அது குழப்பமான வழித்தடம் என்ப தால், எனக்கும் சந்தேகமாகவே இருந்தது. உடனே எனக்கு உதவி செய்வதுபோல, அவர்கள் என்னை தவறான வழியில் வழிநடத்தினர். 


இறுதியில் பள்ளிக்கு செல்லும் பாதையை விட்டுவிட்டு, ஒரு முட்டு சந்தில் பேருந்தோடு என்னை நிற்க செய்துவிட்டனர். அதேபோல, ஒரு பெண் பேருந்தை இயக்கினால், ஆஸ்திரேலியாவில் கொஞ்சம் வித்தியாசமாக பார்ப்பார்கள். குறிப்பாக ஆண்கள் நம் பேருந்தையே உற்று நோக்குவார்கள். சாலையில் வரையப்பட்டிருக்கும் வெள்ளை கோட்டில் இருந்து பேருந்து கொஞ்சம் விலகி சென்றால், ஹாரன் எழுப்பி நம்மை திட்டி தீர்த்துவிடுவார்கள். 

சில ஆண்கள், பெண் ஓட்டுனரை பார்த்து பயந்து பேருந்தில் ஏறாமல், இறங்கி ஓடிய அனுபவமும் இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு பெறுவது சுலபமா? திறமையும், முறையான பயிற்சியும் இருந்தால் நல்ல சம்பளத்தில் ஆஸ்திரேலியாவில் பணிவாய்ப்பு பெறலாம். கொஞ்சம் ஆங்கில புலமையும் அவசியம்.

No comments:

Post a Comment