முக கவசம் அணிய மறுத்தால் உடனடி அபராதம்: அரசு எச்சரிக்கை
'சென்னையில் முக கவசம் அணியாத, சமூக இடைவெளி பின்பற்றாத நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இதையொட்டி மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, சென்னை தி.நகர், ரங்கநாதன் தெருவில், சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், நேற்று ஆய்வு செய்தார். அப்போது, முக கவசம் அணியாத நபர்களுக்கு அறிவுரை கூறியதுடன், தலா, 200 ரூபாய் அபராதம் வசூலித்தார்.
அவர் அளித்த பேட்டி:
சென்னையில், முக கவசம், சமூக இடைவெளி கடைப்பிடிக்காதவர்கள், நிறுவனங்கள் மீது, மாநகராட்சி அதிகாரிகள், உடனடியாக அபராதம் விதித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையை தொடர்ந்து, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில், கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள், 72 மணி நேரத்திற்கு முன், பரிசோதனை செய்திருக்க வேண்டும். அதில், தொற்றில்லை என்றால் மட்டுமே, வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவர். பிரிட்டனில் இருந்து வருபவர்களுக்கு, தமிழகத்தில் மீண்டும் பரிசோதனை செய்யப்படும். அறிகுறி இருந்தால், தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுவர்.சென்னையில் கொரோனா கண்காணிப்பு மையங்கள், 4,000 படுக்கைகளுடன் தயார் நிலையில் உள்ளன. மற்ற மாவட்டங்களிலும், தயார் செய்யப்பட்டு வருகிறது;
மக்கள் அச்சப்பட தேவையில்லை. கொரோனா தடுப்பு பணிகளுக்கு, ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மஹாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா போன்ற மாநிலங்கள், நமக்கு பாடமாக உள்ளன.
தமிழகத்திலும், கொரோனா தொற்று அதிகரிக்கக் கூடாது என, எச்சரிக்கை மணி ஒலிக்கிறது.
எனவே, பொது மக்கள், முக கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தமிழகத்தில் இதுவரை, கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாத, 14 லட்சத்து, 21 ஆயிரத்து, 350 பேரிடமிருந்து, 13.05 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment