கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி | முக கவசம் அணியாவிட்டால் அபராதம் | முழு விவரம் உள்ளே - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 17 March 2021

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி | முக கவசம் அணியாவிட்டால் அபராதம் | முழு விவரம் உள்ளே

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி | முக கவசம் அணியாவிட்டால் அபராதம் | முழு விவரம் உள்ளே 


கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி அலுவலகங்கள், உணவகங்களில் காய்ச்சல் பரிசோதனை கட்டாயம் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் தேர்தல் பிரசாரத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி; தமிழக அரசு அதிரடி உத்தரவு கொரோனா பாதிப்பு அதிகரித்து வரு வதால் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. 

குறிப்பாக பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளது. 



தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 6-ந் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், மாநிலத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. கொரோனா அதிகரிக்க காரணம் தடுப்பூசிகள் பயன்பாட்டில் வந்ததைத் தொடர்ந்து, கொரோனா வைரஸ் பற்றிய அச்சமும், விழிப்புணர்வும் மக்களிடம் குறைந்து விட்டது. முக கவசம் அணிய வேண்டும், கை சுத்தம் பராமரிக்க வேண்டும், தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், கூட்டம் கூடுகிற இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்பவை உள்ளிட்ட முக்கிய கட்டுப்பாட்டு விதிமுறைகளை பெரும்பாலோர் காற்றில் பறக்க விட்டு விட்டனர். 

தவிரவும், குடும்ப விழாக்கள் என்ற பெயரில் பெரும் கூட்டமாக கூடுகிறார்கள். அதில் பெரும்பாலோர் முக கவசம் அணிவதில்லை. பஸ், மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் போன்ற பொது போக்குவரத்து சாதனங்களில் பயணிப்போர் பெரும்பாலோர் முக கவசம் அணிவதில்லை. தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதும் இல்லை. 

இதன் காரணமாக பல மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மராட்டியத்தில் பாதிப்பு அதிகம் குறிப்பாக, மராட்டியத்தில் நாளொன்றுக்கு 16 ஆயிரத்திற்கும் அதிகமாகவும், கேரளாவில் 2 ஆயிரம் பேருக்கும், கர்நாடகத்தில் 900 பேருக்கும், குஜராத்தில் 800 பேருக்கும், டெல்லியில் 400 பேருக்கும், பஞ்சாப் மாநிலத்தில் 1,400 பேருக்கும் கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. 

குஜராத்தில் பல நகரங்களில் இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மராட்டியத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தமட்டில், மத்திய-மாநில அரசின் சிறப்பான நடவடிக்கைகளாலும், கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவதில் மக்கள் அளித்த ஒத்துழைப்பாலும் நோய்த்தொற்று விகிதம் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஒரு சதவீதமாக குறைந்தது. 

மேலும், இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 500 பேருக்கு கீழாக வந்தது. 10 நாட்களாக அதிகரிப்பு ஆனால் கடந்த 10 நாட்களாக படிப்படியாக நோய்த் தொற்றின் அளவு உயர்ந்து, தற்போது 1.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னை, கோவை ஆகிய மாவட்டங்களில் 2 சதவீதத்திற்கு சற்று மேலாகவும், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், காஞ்சீபுரம், தஞ்சாவூர், நாகை ஆகிய மாவட்டங்களில் 1 சதவீதத்திற்கு மேலாகவும் பதிவாக தொடங்கி உள்ளது. 

மேலும், சுமார் 65 ஆயிரம் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனைகளில் உறுதி செய்யப்படும் நோய்த் தொற்று எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, தற்போது மீண்டும் நாளொன்றுக்கு நோய்த் தொற்று 800 பேரை தாண்டி இருக்கிறது. சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை மார்ச் முதல் வாரத்தில் 4 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்து, தற்போது அதிகரித்து வருகிறது. இறப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து சமீபத்தில் நாளொன்றுக்கு 5-க்கும் கீழே பதிவாகி வருகிறது. 

இது தேர்தல் காலம் என்பதால் பொதுக்கூட்டம், பேரணி, ஊர்வலம், வாக்கு சேகரிப்பு உள்ளிட்டவற்றின் பெயரால் மக்கள் கூட்டம் கூடுவது அதிகரிக்கும். அவசர ஆலோசனை இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் பற்றி ஆலோசிப்பதற்காக தமிழக அரசு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சென்னை அரசு தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை நேற்று நடத்தினார். 

காணொலி காட்சி வழியாக நடந்த இந்த கூட்டத்தில் போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொதுத்துறை முதன்மை செயலாளர் பி.செந்தில்குமார் மற்றும் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குநர், சென்னை மாநகராட்சி ஆணையர், மாநகர காவல்துறை ஆணையர், பொது சுகாதாரத்துறை இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டின் கொரோனா தொற்று நிலைமையை பற்றி விரிவாக மாவட்ட கலெக்டர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் தற்போதுள்ள நிலைமை குறித்து எடுத்துரைத்தார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய உத்திகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

முக கவசம் அணியாவிட்டால் அபராதம் அதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பிறப்பித்த உத்தரவில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- 

 * பொது இடங்களில் பொதுமக்கள் முக கவசம் அணிவதையும், அரசு வெளியிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை நிறுவனங்கள் கடைபிடிப்பதையும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, சுகாதாரத்துறை, காவல் துறை, வருவாய்த் துறையினர் கண்காணிக்க வேண்டும். இதை மீறுபவர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்க வேண்டும். 

 * அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள் போன்ற பொது இடங்களுக்கென ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள தெளிவான நெறிமுறைகள்படி கிருமி நாசினி உள்ளதா? மக்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என பரிசோதனை செய்து உறுதிபடுத்த வேண்டும்.

 * மேற்கூறப்பட்டுள்ள நெறிமுறைகள், அனைத்து இடங்களிலும் (நிறுவனங்கள், வங்கிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள், திருமண மண்டபங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில்) பின்பற்றப்படுகின்றனவா என்பதை சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் கண்காணிக்க வேண்டும். காய்ச்சல் முகாம்கள் 

 * கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துதல், அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் கூடும் இடங்களாகிய பொது குழாய் இருக்கும் இடம், பொது கழிப்பிடம் போன்ற இடங்களில் கண்கூடாக தெரியும்படி கிருமி நாசினி தெளித்தல் போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். 

 * கொரோனா தொற்று உள்ளவர்களின் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி, பரிசோதனை செய்து (ஆர்.டி.பி.சி.ஆர்.) மாதிரிகள் எடுக்கவேண்டும். தொற்று உள்ளவர்களுக்கு உரிய நேரத்தில் தாமதமின்றி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். 

 * கூட்டாக நோய்த் தொற்று ஏற்படும் பகுதிகளில் உரிய அலுவலர்களை நியமித்து அதனை உறுதிசெய்து தகுந்த நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 

 * காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தி, நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். * நோய்த் தொற்று உள்ள இடங்களில் நோய்த் தொற்றை தடுக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தி கிருமி நாசினி தெளிக்க வேண்டும். தகுதியுள்ளோருக்கு தடுப்பூசி 

 * தகுதி வாய்ந்த நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நோய்த் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி தடுப்பூசி செலுத்துவதை விரிவாக்கம் செய்ய வேண்டும். 

 * வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கடந்த ஆண்டைப்போல் கண்காணிக்க வேண்டும். 

 * மக்கள் அதிகமாக கூடும் தேர்தல் பிரசார கூட்டங்கள், கலாசார, வழிப்பாட்டு மற்றும் பிற கூட்டங்களுக்கு பொது மக்கள் முக கவசம் அணிவதை கட்டாயம் என நிபந்தனை விதித்து அனுமதி அளிக்க வேண்டும். அதை சம்பந்தப்பட்ட துறையினர் உறுதிபடுத்திட வேண்டும். 

 * மாநிலத்தில் தேர்தல் நடத்துவதற்கான பணிகளின் முக்கிய பங்காக கொரோனா தடுப்பு பணிகளுக்கு முழுமையாக முக்கியத்துவம் அளித்து நோய்த் தொற்றை குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் தொடர்ந்து எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு அறிவுரை 

 * பொதுமக்களை பொறுத்தவரை பொது இடங்களில் செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து, அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து சுகாதாரம் பேண வேண்டும். ஏதாவது நோய்த் தொற்று அறிகுறி இருந்தால் காலதாமதமின்றி உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி இதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டு, தேவையான சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment