கூகுள் மேப்பில் உங்கள் தெரு!
புது இடத்துக்குச் செல்ல வேண்டுமென்றால் மற்றொருவரின் உதவி தேவைப்பட்ட காலம் அன்று. இன்றோ நள்ளிரவிலும் கூட யாருடைய உதவியும் இல்லாமல் இதற்கு முன்பு சென்றிராத புதிய பகுதிகளுக்கும்கூட உங்களை அழைத்துச் செல்கிறது கூகுள் மேப்ஸ்.
2005-இல் கூகுள் மேப்ஸ் தொடங்கப்பட்டபோது இதுவா நமக்கு வழிகாட்டப்போகிறது என்று எல்லாரும் நினைத்திருப்பார்கள்.
ஆனால், இன்று மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்கு நெடுஞ்சாலை, சாலை, சந்து, குறுக்குச்சந்து என யார் எங்கிருந்தாலும் அங்கு செல்ல வழிகாட்டி அழைத்து செல்கிறது கூகுள் மேப்ஸ்.
ஏன், விமானம், ரயில், கார், இருசக்கர வாகனம், சைக்கிள் என எதில் பயணம் செய்தாலும் எங்கு எப்போது எவ்வளவு நேரத்தில் சென்றடைவோம் என்பது போன்ற துல்லிய விவரங்களையும் காட்டிவிடுகிறது.
கூகுள் மேப்பில் விடுபட்ட தெருக்களை பயனாளிகளே வரைந்து இணைக்கும் புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் பெயின்ட்டில் எப்படி சிறு கோடுபோட்டு வரைவோமோ அப்படி புதிய தெருக்களை கூகுள் மேப்பில் குறிப்பிடலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
80 நாடுகளில் முதல் கட்டமாக இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எந்த இடத்தில் சாலை இருக்க வேண்டும் என்ற குறிப்பிட்டு அந்தச் சாலையின் பெயரைப் பதிவு செய்து கூகுளுக்கு அனுப்ப வேண்டும்.
ஏற்கெனவே உள்ள சாலைகளின் பெயர்கள், திசைகள் தவறாக இருந்தால் அவற்றையும் மாற்றம் செய்ய பரிந்துரைக்கலாம்.
அதேநேரத்தில், நடைப்பாதைகளை சாலைகளாக மாற்றி குறிப்பிடக்கூடாது எனவும் கூகுள் எச்சரிக்கை அளிக்கிறது. புதிய மாற்றங்களை ஆய்வு செய்து அமல்படுத்த ஏழு நாள்கள் ஆகிறது.
மேலும், கூகுளில் ஓர் இடத்தின் புகைப்படத்தைப் பதிவிட்டு அந்த இடத்தின் சிறப்பம்சம், எப்படி செல்ல வேண்டும் என்ற சிறு குறிப்பு விவரங்களைப் பயனாளிகளே பதிவு செய்யும் புதிய சேவையையும் கூகுள் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
பிறகென்ன, உங்கள் தெரு கூகுள் மேப்பில் விடுபட்டிருந்தால் இணைத்துவிடுங்கள்.
No comments:
Post a Comment