தெரிந்து கொள்வோம் மரங்கொத்தி பறவைக்கு 14 செ.மீ. நீள நாக்கு...!
பறவைகள் எப்போதுமே கூட்டமாகத்தான் பறக்கும். ஆனால் மரங்கொத்தி பறவைகள் தனித்து வாழும் இனம். சுமார் 200 வகை மரங்கொத்திகள் இருக்கின்றன.
ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், நியூசிலாந்து போன்ற நாடுகளில் மரங்கொத்தி பறவைகள் கிடையாது.
சிட்டுக் குருவியைப் போல 7 சென்டிமீட்டர் அளவிலும், பெரிய பருந்து அளவிலும் மரங்கொத்திகள் உண்டு. இப்போது உயிரோடு இருப்பவைகளில் தெற்காசியாவில் உள்ள கிரேட் ஸ்லேட்டி வகைதான் மிகப்பெரியது. இவை 50 சென்டிமீட்டர் நீளம் கொண்டவை.
மரங்கொத்திகள் பெரும்பாலும் கருப்பு, வெள்ளை, சிவப்பு, மஞ்சள் நிறங்களில் காணப்படுகின்றன.
மரங்கொத்தியின் அலகு கூர்மையான உளியைப் போல இருக்கும். ஒரு நாளைக்கு 8 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் முறை மரத்தைக் கொத்தும்.
மரத்தில் கொத்தித் துளையிட்டு அதில் வாழும். இதன் தலைப்பகுதியில் இருக்கும் காற்றுப் பை, குஷன் போல் செயல்பட்டு கொத்தும்போது ஏற்படும் அதிர்வுகளை தாங்குகிறது.
மரப்பட்டைகளின் இடுக்குகளில் வாழும் சிறு வண்டுகள், பூச்சிகள்தான் இவற்றின் உணவு. இவை தவிர பழங்களையும் விதைகளையும் சாப்பிடும்.
இதன் நாக்கு மிக நீளம். 14 சென்டி மீட்டர் நீளமுடைய நாக்கு, பொந்தினுள் மறைந்திருக்கும் உணவையும் தேடிப்பிடிக்கும். நாக்கு நுனியில் இருக்கும் பிசுபிசுப்பான ஒரு திரவத்தில் பூச்சிகள் எளிதாக ஒட்டிக்கொள்ளும்.
கண்ணின் மேல் உள்ள படலம், மரங்களை கொத்தும்போது தெறிக்கும் மரத்துகள்களில் இருந்து கண்களை பாதுகாக்கிறது.
மரங்கொத்திகளுக்கு காலில் முன் பக்கம் இரு விரல்களும், பின்பக்கம் இரு விரல்களும் உண்டு. இந்த விரல்களால் மரத்தை இறுகப் பற்றிக்கொண்டு இரை தேட முடிகிறது. காகம், கிளி, குயில் போல மரங்கொத்திகளுக்கு தனித்த குரல் கிடையாது.
No comments:
Post a Comment