அபுதாபியில் வசித்து வரும் 5 வயதான இந்திய-அமெரிக்க சிறுமி 2 மணி நேரத்துக்குள் 36 புத்தகங்களை படித்து உலக சாதனை படைத்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த பெற்றோருக்கு அமெரிக்காவில் பிறந்த இந்திய -அமெரிக்க சிறுமி கியாரா கவுர். 5 வயதான இச்சிறுமி தற்போது பெற்றோருடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார்.
இந்த சிறுவயதில் 36 புத்தகங்களை 1 மணி நேரம் 45 நிமிடங்களில் படித்து முடித்து உலக சாதனை செய்துள்ளார். இந்த சாதனைக்காக லண்டன் உலக சாதனை புத்தகத்திலும் ஆசியா சாதனைப் புத்தகத்திலும் கியாரா கவுர் இடம் பிடித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதியன்று 36 புத்தகங்களை இடைவிடாமல் 105 நிமிடங்களில் படித்ததற்காக ‘குழந்தை மேதை’ என்று லண்டன் உலக சாதனை புத்தகம் கியாரா கவுரை பாராட்டி உள்ளது.
கியாரா கவுருக்கு புத்தகங்கள் படிப்பதில் இருந்த ஆர்வத்தை அபுதாபியில் அவரது ஆசிரியர்தான் முதலில் கவனித்து ஊக்கமளித்துள்ளார். கடந்த ஆண்டில் 200 புத்தகங்களுக்கு மேல் கியாராகவுர் படித்ததாகவும் புதிய புத்தகங்கள் மட்டுமின்றி ஏற்கெனவே படித்த புத்தகங்களை மீண்டும் படிக்க விரும்புவதாகவும் அவரதுபெற்றோர் தெரிவி்த்தனர். ஆலிஸ்இன் வொண்டர்லேண்ட், சிண்ட்ரெல்லா, லிட்டில் ரெட் ரைடிங் ஹூட் மற்றும் ஷூட்டிங் ஸ்டார் ஆகியவை கியாராவுக்கு பிடித்த சில புத்தகங்கள்.
கியாரா கவுர் கூறுகையில், ‘‘புத்தகங்கள் படிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் விரும்பும் இடத்துக்கு புத்தகங்களை கொண்டு செல்லலாம். ஸ்மார்ட் போன்களில் படிக்கும்போதோ, வீடியோக்கள் பார்க்கும்போதோ இணையம் இணைப்பு இல்லாவிட்டால் படிக்க முடியாது. புத்தகங்களை எங்கும் எப்போதும் படிக் கலாம்’’ என்றார்.
No comments:
Post a Comment