பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை - EDUNTZ

Latest

Search here!

Friday, 9 April 2021

பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார், கல்வித்துறை அதிகாரிகளுடன் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார். 



கொரோனா தொற்று 

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. அதன் பின்னரும் நோய்த்தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்ததால், ஆன்லைன் மற்றும் கல்வித்தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. கடந்த ஆண்டின் இறுதியில் நோய் பரவல் சற்று குறைந்ததை தொடர்ந்து, நேரடி வகுப்புகள் தொடங்குவது பற்றி கல்வித்துறை ஆலோசித்தது. அதன்படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கும், கடந்த பிப்ரவரி மாதத்தில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இருப்பினும், பள்ளிகளில் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட அறிவுறுத்தப்பட்டு இருந்தது. 

தாக்கம் அதிகரிப்பு 

அதன் அடிப்படையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் 9-ம் வகுப்புக்கு ஆண்டு இறுதித்தேர்வும், 10 மற்றும் 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்-அமைச்சர் அறிவித்தார். ஆனால் பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் குறைந்து கொண்டு வந்த கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அந்தவகையில், தற்போது தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் தினசரி எண்ணிக்கை 4 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. 

அதிகாரிகள் ஆலோசனை 

கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது அரசு சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அறிவித்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, அடுத்த மாதம் நடைபெற உள்ள பிளஸ்-2 பொதுத் தேர்வை திட்டமிட்டப்படி நடத்துவதா? அல்லது தேர்வை ஒத்திவைக்கலாமா?, தேர்வை நடத்துவது என்றால், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது? முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்ய வேண்டியவை எவை? என்பது குறித்து கல்வித்துறை சார்பில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. சென்னை தலைமை செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பள்ளிக்கல்வித்துறையின் ஆணையர் வெங்கடேஷ் உள்பட உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

முக்கிய முடிவுகள் 

ஏற்கனவே கடந்த 5-ந்தேதி கல்வித்துறை சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து, தற்போது மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுத இருக்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வு குறித்து இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகளின் அடிப்படையில், அரசு தரப்பில் இருந்து சில அறிவிப்புகள் வெளியாகவும் வாய்ப்பு இருப்பதாக கல்வித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment