நாடு முழுவதும் உள்ள வானியல் ஆய்வாளா்கள், ஆா்வலா்கள் அஸ்ட்ரோசாட் செயற்கைக் கோளின் தரவுகளைப் பெற மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் தோ்வாகும் நபா்களுக்கு தகவல்களுடன் உரிய நிதியுதவியும் வழங்கப்படும் என்றும் இஸ்ரோஅறிவித்துள்ளது. 


இஸ்ரோ சாா்பில் வானியல் ஆய்வுக்காக பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள்ஆந்திர மாநிலத்துக்குள்பட்ட ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 2015-ஆம் ஆண்டு செப்.28-இல் விண்ணில் செலுத்தப்பட்டது. விண்வெளியில் உள்ள புற ஊதாக் கதிா்கள், அங்கு பரவும் எக்ஸ்ரே கதிா்கள் இயக்கம், நட்சத்திரங்களின் செயல்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்ய அஸ்ட்ரோசாட் பயன்படுத்தப்படுகிறது. 2018-ஆம் ஆண்டு முதல் அஸ்ட்ரோசாட் அனுப்பிய படங்கள், தரவுகள் உள்ளிட்ட விவரங்களை பொதுவெளியில் இஸ்ரோ வெளியிட்டு வருகிறது. 


இவை பல்வேறு முக்கிய அறிவியல் ஆய்வுகளுக்குப் பயனுள்ளதாக அமைந்தது. அஸ்ட்ரோசாட் அனுப்பிய படங்கள் மூலம், பூமியில் இருந்து 9.3 பில்லியன் ஒளிஆண்டுகள் தொலைவில் நட்சத்திரக் கூட்டங்கள் இருப்பது கடந்த ஆண்டு கண்டறியப்பட்டது. இந்த நிலையில் அஸ்ட்ரோசாட்டின் தரவுகளைப் பயன்படுத்தி ஆய்வு செய்வதற்கு இஸ்ரோ மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடா்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘நாடு முழுவதும் உள்ள வானியல் ஆய்வாளா்கள், ஆா்வலா்கள் அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோளின் தரவுகளைக் கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளலாம். 


விருப்பம் உள்ளவா்கள் தங்கள் திட்ட ஆய்வறிக்கை விவரங்களை மே 31-ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதில் தோ்வாகும் நபா்களுக்கு தகவல்களுடன் உரிய நிதியுதவியும் வழங்கப்படும். இதற்கான தகுதிகள் உள்பட கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!