அடிக்கடி பசி எடுக்கிறதா? காரணம் இதுதான்! - EDUNTZ

Latest

Search Here!

Monday, 19 April 2021

அடிக்கடி பசி எடுக்கிறதா? காரணம் இதுதான்!

நீங்கள் எப்போதும் பசியுடன் இருப்பது போன்று உணர்கிறீர்களா? அல்லது சாப்பிட்ட சிறிது நேரத்தில் பசிக்கிறதா? இதற்கான காரணம் என்னவென்று ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. 


உடலில் ரத்த சர்க்கரை அளவைப் பொருத்தே பசி ஏற்படுகிறது, அதாவது உடலில் ரத்த சர்க்கரை அளவு வேகமாக குறையும்போது பசி ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஊட்டச்சத்து ஆராய்ச்சி இதழான பிரிடிக்ட்டில் (PREDICT) இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. லண்டனின் கிங்ஸ் கல்லூரி மற்றும் சுகாதார அறிவியல் நிறுவனமான சூ (ZOE) (ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி, ஹார்வர்ட் டி.எச். சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த், மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனை, நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம், லீட்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்வீடனில் உள்ள லண்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உள்பட) ஆராய்ச்சிக் குழு இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது. சுமார் 1,070 பேர் கலந்துகொண்ட ஆய்வில் ரத்த சர்க்கரை அளவும், பசி உணர்வும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. 

முன்னதாக அனைவருக்கும் ஒரே அளவு கலோரி கொண்ட உணவுகள் வழங்கப்பட்டன. எனினும் அவர்கள் எடுத்துக்கொண்ட உணவில் கார்போஹைடிரேட், புரதம் உள்ளிட்ட அளவுகள் மாறுபட்டன. அவர்களின் செயல்பாடுகளை கண்காணித்ததில் ரத்த சர்க்கரை அளவில் மாறுபாடு அதிகம் இருக்கும்போது பசி உடனடியாக ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. 

 அதாவது காலை உணவு சாப்பிட்டு 2-3 மணி நேரத்தில் பசித்தவர்களுக்கு உடலில் ரத்த சர்க்கரை அளவு வேகமாக குறைந்திருந்தது. இதனால் அவர்கள் அதிகம் சாப்பிட வேண்டியிருந்தது. சாப்பிட்டவுடன் ரத்த சர்க்கரை அளவு வேகமாக அதிகரித்து ஒரு சில மணி நேரங்களிலேயே வேகமாக குறையும்போது பசி ஏற்படுகிறது. அதுவே, ரத்த சர்க்கரை அளவு சாதாரண விகிதத்தில் மாறுபவர்களுக்கு 3-4 மணி நேரம் கழித்தே பசி ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் குறைவாக அல்லது வழக்கமாக உணவை எடுத்துக்கொள்வதால் எந்த மாறுபாடும் இல்லை. 

 ஆகவே, ரத்த சர்க்கரை அளவில் அதிக மாறுபாடு கொண்டவர்கள் நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகமாகவும், கார்போஹைடிரேட் உணவுகளை குறைவாகவும் எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவை நிலைப்படுத்தலாம். ரத்த சர்க்கரை அளவில் அதிக மாறுபாடு கொண்டவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயமும் அதிகமாக இருக்கலாம் அல்லது நீரிழிவு நோய் உள்ளவர்களாக இருக்கலாம். அடிக்கடி பசி எடுத்தால் உங்களது ரத்த சர்க்கரை அளவை சோதிக்க மருத்துவரை அணுகுங்கள்.

No comments:

Post a Comment