தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு முறைகளில் பல்வேறு முற்போக்கான மாற்றங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் ஆதார் எண் குறித்த விவரங்களை ஓ.டி.ஆர். கணக்குடன் இணைத்தல், தேர்வர்களுக்கு வழங்கப்படும் ஓ.எம்.ஆர். கொள்குறி வகை விடைத்தாளில் பெருவிரல் ரேகை பதிவு செய்தல், அனைத்து கேள்விகளுக்கு தேர்வர்கள் கட்டாயம் விடை அளிக்க வேண்டும் உள்பட சில நடைமுறைகள் கொண்டு வரப்பட்டு நடைமுறையில் இருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக தேர்வு நடவடிக்கைகள் முழுவதும் நிறைவடைந்த பின் தேர்வர்களின் விடைத்தாள் நகல் இணையதளம் மூலமாக உரிய கட்டணத்தை செலுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளும் நடைமுறை கொண்டு வரப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி நடந்த குரூப்-1 முதல்நிலைத் தேர்வு, அதன் பின்னர் அதே ஆண்டு ஜூலை மாதம் 12, 13, 14-ந் தேதிகளில் நடைபெற்ற முதன்மைத் தேர்வுக்கான விடைத்தாள்கள் இன்று (புதன்கிழமை) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இது தேர்வாணைய வரலாற்றில் முதன் முறையாகும்.
இந்த வசதியை பயன்படுத்தி தேர்வு எழுதிய தேர்வர்கள் ஓ.டி.ஆர். கணக்கு மூலம் உரிய கட்டணத்தை செலுத்தி அவரவர் விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோல், குரூப்-1 பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனைத்து விவரங்கள் அடங்கிய தேர்வு பட்டியல், அவர்களின் புகைப்படங்களுடன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
1.1.2020-க்கு பிறகு தேர்வு நடவடிக்கைகள் முற்றிலும் நிறைவடைந்துள்ள தேர்வுகளின் விடைத்தாள்கள் இணையதளத்தில் படிப்படியாக விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.
மேற்கண்ட தகவல் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment